ஜல்னா,
பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், சமீபத்தில் அரசு நிகழ்ச்சியில் பணி நியமன ஆணை வழங்கியபோது, பெண் டாக்டரின் முகத்தில் இருந்து ஹிஜாப்பை அகற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் நிதிஷ்குமாருக்கு ஆதரவாக பேசிய உத்தரபிரதேச மந்திரி சஞ்சய் நிஷாத், “அவர் அந்த பெண்ணை வேறு எங்காவது தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்” என்று கூறியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மராட்டிய மாநிலம், ஜல்னாவில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தல் பிரசார கூட்டத்தில், ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி தலைமையிலான எம்.ஐ.எம். கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான இம்தியாஸ் ஜலீல் பேசினார்.
அப்போது அவர் பீகார் சம்பவத்தில் உத்தரபிரதேச மாநில மந்திரியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆவேசமாக பேசுகையில், “எந்தவொரு நபருக்காவது எங்கள் முஸ்லிம் சகோதரிகளை தவறான எண்ணத்துடன் தொடும் துணிச்சல் இருந்தால், நான் அவரது கையை வெட்டுவேன். தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் கட்சிகள், ரவுடிகளுக்கும், குற்ற பின்னணி கொண்டவர்களுக்கும் ஆதரவு அளிக்க தயங்குவதில்லை. ஆனால், முஸ்லிம்களுக்கு ஆதரவாக நிற்கவும், அவர்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் வழங்கவும் அவர்கள் அஞ்சுகிறார்கள். முஸ்லிம்கள் தலைவர்களாக உருவெடுப்பதை அக்கட்சிகள் விரும்புவதில்லை. எம்.ஐ.எம் கட்சியை தீண்டத்தகாத கட்சியாகவும், வகுப்புவாத கட்சியாகவும் முத்திரை குத்துகிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள்தான் மிகப்பெரிய வகுப்புவாதிகள்” என்று அவர் கூறினார்.