வெனிசுலா அதிபர் சிறைப்பிடிப்பு: "சர்வதேச சட்டமீறல்" – ட்ரம்பிற்கு நியூயார்க் மேயர் மம்தானி கண்டனம்

தென் அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணெய் வளம் மிகுந்த நாடு. எண்ணெய் மூலம் பெறும் லாபத்தை போதை, தீவிரவாதம், ஆள் கடத்தல், கடத்தல்களுக்கு வெனிசுலா பயன்படுத்துகிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. அதனால் 2019-ம் ஆண்டில் இருந்தே, வெனிசுலா எண்ணெய்க்குத் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் படை வெனிசுலா நாட்டின் மீது பெரிய தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை வெனிசுலா தேசிய அவசர நிலையாகப் பிரகடனப்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், நேற்று அமெரிக்கப் படைகளால் வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறைப்பிடிக்கப்பட்டிருக்கின்றனர்.

நிக்கோலஸ் மதுரோ
நிக்கோலஸ் மதுரோ

நிக்கோலஸ் மதுரோ கை விலங்கிடப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு அழைத்துச் செல்லப்படும் புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டிருக்கிறார்.

தற்போது நிகோலஸ் மதுரோ, நியூயார்க்கிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார். அங்கே அவர் மீதிருக்கும் போதை மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட உள்ளன.

நிகோலஸ் மதுரோவின் சிறைப்பிடிப்பிற்கு ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. மேலும், இந்தத் தாக்குதல் கைது நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவில் இருந்தே கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ், “நிகோலஸ் மதுரோ கைது நடவடிக்கையானது, போதை மற்றும் ஜனநாயகத்திற்காக நடத்தப்பட்டதல்ல. எண்ணெய் மற்றும் இந்தப் பிராந்தியத்தில் ட்ரம்ப்தான் வலுவான தலைமை என்பதைக் காட்ட நடத்தப்பட்டது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் நேரடியாகப் பேசினேன். இது இறையாண்மை கொண்ட நாட்டின் மீதான ஒருதலைப்பட்சத் தாக்குதல் போர் நடவடிக்கை. இந்தச் செயலுக்கு எனது எதிர்ப்பைப் பதிவு செய்ய நான் அதிபரை அழைத்து அவரிடம் நேரடியாகப் பேசினேன்.

ஜோஹ்ரான் மம்தானி
ஜோஹ்ரான் மம்தானி

எனது எதிர்ப்பைப் பதிவு செய்தேன். அதைத் தெளிவாகத் தெரிவித்தேன். அரசு மாற்றத்திற்கான அப்பட்டமான முயற்சி இது. இந்த நடவடிக்கை மத்திய மற்றும் சர்வதேச சட்ட மீறலாகும். இந்த நடவடிக்கை வெளிநாடுகளில் உள்ளவர்களை மட்டும் பாதிக்கவில்லை, இது இந்த நகரத்தைத் தங்கள் வீடாகக் கருதும் பல்லாயிரக்கணக்கான வெனிசுலா நாட்டினர் உட்பட நியூயார்க் நகர மக்களையும் நேரடியாகப் பாதிக்கிறது.

அவர்களின் பாதுகாப்பிலும், ஒவ்வொரு நியூயார்க் நகரவாசியின் பாதுகாப்பிலும்தான் எனது கவனம் உள்ளது. எனது நிர்வாகம் இந்தச் சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து, தொடர்ந்து வழிகாட்டுதல்களை வழங்கும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.