Rajini: “குருஷேத்திர யுத்தத்தில் வரும் கண்ணன் மாதிரி ஏவி.எம் சரவணன் சார்" – நெகிழும் ரஜினிகாந்த்

ஏ.வி.எம். நிறுவனத்தின் உரிமையாளரும், பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏவி.எம்.சரவணன் கடந்த டிசம்பர் 4-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து ஏவி.எம்.சரவணன் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.வி.எம். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மறைந்த ஏவி.எம்.சரவணன் உருவப்படத்தைத் திறந்து வைத்தார்.

படத்திறப்பு நிகழ்வில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ஏவி.எம்.சரவணன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நினைவேந்தல்: ஏவி.எம் சரவணன்
நினைவேந்தல்: ஏவி.எம் சரவணன்

இந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகர் ரஜினிகாந்த், “1975ல் ஏவிஎம் ஸ்டுடியோவில் ‘அவர்கள்’ பட சூட்டிங். அப்போதுதான் கமல்சார் எனக்கு இவர்தான் ஏவி.எம் சரவணன் சார் எனக் காண்பித்தார்.

அதற்குப் பிறகு, 8 வருடம் கழித்து ஏ.வி.எம் 1980-ல் முரட்டுக்காளை படம் தயாரித்தது. அந்தப் படத்தில் ஏவி.எம் செட்டியார் ஆலோசனையில் என்னை ஹீரோவாகத் தேர்வு செய்தார்கள்.

அப்போதுதான் சரவணன் சாரை நேரில் முதன்முதலாகச் சந்தித்தேன். நான் ஏ.வி.எம்-ல் 11 படங்கள் நடித்திருக்கிறேன். அதில் எஸ்.பி. முத்துராமன் சாருடன் ஒன்பது படங்களில் நடித்திருக்கிறேன். ஒவ்வொரு படத்தின் கதையையும் நாம் கேட்க வேண்டியதே இல்லை.

எல்லாமே அவரே ரெடி பண்ணி எந்த ஆர்டிஸ்ட்க்கு என்ன மாதிரி படம் பண்ணனும், எந்த மாதிரி கதைத் தேர்வு செய்யணும், ரசிகர்கள் என்ன விரும்புறாங்க, ஒரு படம் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என ஆய்வு செய்து ஸ்கிரீன் பிளே, மியூசிக், எடிட்டிங் என எல்லாவற்றிலும் அவரின் கை இருக்கும். ஆனால் அது யாருக்கும் தெரியாது.

நினைவேந்தல்: ஏவி.எம் சரவணன்
நினைவேந்தல்: ஏவி.எம் சரவணன்

எப்படி கண்ணன் மகாபாரத குருஷேத்திர யுத்தத்தில எந்த ஆயுதமும் ஏந்தாமல் ரதத்திலேயே இருந்து வென்றாரோ அப்படி, அலுவலகத்தில் இருந்துகொண்டே எல்லா படத்தையும் வெற்றியடைய வைப்பவர்தான் சரவணன் சார்.

எஜமான், நல்லவனுக்கு நல்லவன் போல செண்டிமெண்டான ஒரு படம் எடுக்க வேண்டும் என சரவணன் சார் சொல்லிக்கொண்டிருந்தார். இதே மாதிரி ஒரு சென்டிமென்ட் படக்கதை உதயகுமாரிடம் இருக்கிறது. நல்ல டைரக்டர் என அறிமுகம் செய்துவைத்தேன்.

அப்போது சரவணன் சார், `அது எப்படி எஸ்பி முத்துராமனுடன் இத்தனை படம் எடுத்திருக்கிறோம். அவரை விட்டு படம் பண்ண முடியாது’ என்றார். நான் அமைதியாகிவிட்டேன். அதற்கு அடுத்தநாள், முத்துராம் சார் என்னை அழைத்து, `சரவணன் சார் கூட இருக்கேன். இங்கே வரமுடியுமா?” என்றார். நானும் ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்குச் சென்றேன். அப்போது முத்துராமன் சார், `நான் சரவணன் சாரிடம் பேசிவிட்டேன். நீ உதயகுமாரின் படத்தில் நடி’ என்றார்.

ஏவிஎம் சரவணனுடன் நடிகர் ரஜினி - இயக்குநர் முத்துராமன்
ஏவிஎம் சரவணனுடன் நடிகர் ரஜினி – இயக்குநர் முத்துராமன்

அப்போதும் சரவணன் சார், `முத்துராமன் சார் நீங்க சொல்றீங்க அதுக்காக நான் பண்றேன். எனக்கு இந்தப் படம் நீங்க இல்லாமல் செய்வதற்கு மனதே இல்லை. எனவே, ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ஒரு ரூம் போட்டு கொடுக்கறேன்.

தினமும் வந்து நீங்க என் கண் முன்னால் இருக்க வேண்டும். அப்போதுதான் எனக்கு நிம்மதி’ என்றார். அப்போதுமுதல் இப்போதுவரை ஏவிஎம் ஸ்டுடியோவில் அந்த ரூம் இருக்கிறது. அதுதான் அவர்களின் நட்புக்கு இலக்கணம்.

சரவணன் சார் எனக்கு சினிமா மட்டும் இல்லாமல், தனிப்பட்ட முறையில எவ்வளவோ செய்திருக்கிறார். ராகவேந்திர மண்டபம் இருக்கும் இடம் காலி நிலம். அதில் மண்டபம் கட்டச் சொல்லி, உடன் இருந்து, அவர் கண் பார்வையில் கட்டியவர் சரவணன் சார். அதேபோல என் வீட்டருகில் ஒரு காலி நிலம் இருந்தது.

அதை வாங்கலாம் என முயன்றபோது 10 -15 மடங்கு விலை சொன்னார்கள். அதனால் நான் வாங்கும் எண்ணத்தை விட்டுவிட்டேன். ஆனால் சரவணன் சார், `எவ்வளவு விலை இருந்தாலும் நீயே வாங்கிவிடு. வேறு யாராவது வந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தால் அப்போது நீ வருத்தப்படுவாய்’ என்றார். இதுபோல நிறைய விஷயங்கள் இருக்கிறது.

ஏவிஎம் சரவணனுடன் நடிகர் ரஜினி - இயக்குநர் முத்துராமன்
ஏவிஎம் சரவணனுடன் நடிகர் ரஜினி – இயக்குநர் முத்துராமன்

சிவாஜி படம் நடித்தபோது சரவணன் சார் என்னிடம் சொன்னார், ` 3 வருடத்துக்கு ஒரு படம்,  2 வருடத்துக்கு ஒரு படம் என நடிக்கிறாய். வயது ஆக ஆக தொடர்ந்து ஆக்டிவாக இருக்க வேண்டும். எனவே, குறைந்தது ஒரு வருடத்துக்கு ஒரு படம் என்றாவது நடி’ என்றார். அவரின் அந்த வார்த்தையைதான் நான் இன்றும் வருடத்துக்கு ஒரு படம் என நடித்து வருகிறேன்.

அரசியல் சாராத சரவணன் சார் மீது எல்லா அரசியல் தலைவர்களுக்கும் நல்ல மரியாதை இருந்தது. முதல்வர் ஸ்டாலின் இந்தத் தேர்தல் சூழலிலும் தன் பணிகளை விட்டுவிட்டு இங்கு வந்து சரவணன் சாருக்கு அஞ்சலி செலுத்துகிறார் என்றால் அதற்குக் காரணம் சரவணன் சார் மீது இருக்கும் மரியாதைதான்.

நம் வாழ்க்கையில் வந்து, நம்மை விரும்பும் சிலர் இருப்பாங்க அவர்கள்தான் நம் அசைய சொத்து. அப்படி எனக்கு கே.பாலசந்திரன், சோ, பஞ்சு அருணாச்சலம், முத்துராமன், சரவணன், டாக்டர் கலைஞர் இவர்களெல்லாம் என் அசையா சொத்துகள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.