பிக் பாஸ் பிரபலமான ஜெய் துதானே, கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் தனது நீண்ட நாள் காதலி ஹர்ஷலா பாட்டீலை திருமணம் செய்து கொண்டார். அவர் தனது மனைவி, சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவி ஆகியோருடன் தேனிலவுக்கு புறப்பட்டார். மும்பை விமான நிலையத்தில் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கும் வகையில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு இருந்தது. விமானநிலையத்தில் அவரது பாஸ்போர்ட்டை சோதித்தவுடன் அவருக்கு எதிராக தேடப்படும் நபர் நோட்டீஸ் வெளியிடப்பட்டு இருப்பதை அதிகாரிகள் தெரிந்து கொண்டு இது குறித்து அவரிடம் தெரிவித்தனர்.
மேலும் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து அவரை கைது செய்துள்ளனர். ஜெய் துதானே கடை ஒன்றை போலி ஆவணங்கள் மூலம் பலருக்கு விற்று ரூ.5 கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கில்தான் இந்த நோட்டீஸ் வெளியிடப்பட்டு இருந்தது. இது ஜெய் துதானேவிற்கு தெரியாமல் இருந்தது. கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்படும் போது நிருபர்களுக்கு பேட்டியளித்த ஜெய் துதானே,”என் மீதான குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது.
இதில் எனக்கு எந்த வித தொடர்பும் கிடையாது. நான் கவலைப்படப்போவதில்லை. சூழ்நிலையை எதிர்கொள்வேன். என் மீதான ரூ.5 கோடி புகாரை கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது. என் மீதான புகாருக்கு யாராவது ஆதாரத்தை காண்பிக்க முடியுமா?. ஒரு கடையை விற்பனை செய்ய பதிவு செய்யப்பட்டுவிட்டால் அதனை மீண்டும் விற்பனை செய்ய முடியாது.
நான் எனது மனைவியோடு தேனிலவுக்கு சென்று கொண்டிருந்தபோது என்னால் வெளிநாடு செல்ல முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்”என்றார். இம்மோசடி தொடர்பாக ஜெய் துதானேயின் தாயார், சகோதரி, தாத்தா, பாட்டி ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். அனைவர் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. ஜெய் துதானே மராத்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதோடு மாடலாகவும், உடல் பயிற்சியாளராகவும், நடிகராகவும் இருக்கிறார்.