லொள்ளு சபா வெங்கட் ராஜ் மறைவு: 'டைப் ரைட்டர் மெக்கானிக் டு நடிகர்' – பகிரும் இயக்குநர் ராம்பாலா

நடிகர் லொள்ளு சபா வெங்கட் ராஜ் நேற்று உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. ‘வல்லனுக்குப் புல்லும் ஆயுதம்’, ‘மனிதன்’, ‘டிக்கிலோ’ எனப் பல படங்களிலும் நடித்திருக்கிறார்.

‘மனிதன்’ படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாகக் கலகலக்க வைத்திருப்பார். சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ படத்தில் கம்பிக்கிடையே புகுந்து புகுந்து வந்திடுவார். ‘வடக்குப்பட்டி ராமசாமி’யில் எதிர்காற்று அடித்ததில், லேட் ஆக நடந்து வந்தேன் என்பார். இப்படி சின்னதொரு ரோலில் நடித்திருந்தாலும் காமெடியில் அதகளம் செய்திருப்பார் வெங்கட் ராஜ்.

மறைந்த நடிகர் வெங்கட் ராஜ் குறித்து ‘லொள்ளு சபா’ இயக்குநர் ராம்பாலாவிடம் பேசினோம்.

பெரிய திரையில் சந்தானத்தை வைத்து ‘தில்லுக்கு துட்டு’ மற்றும் ‘தில்லுக்கு துட்டு 2’, மிர்ச்சி சிவா நடிப்பில் ‘இடியட்’ ஆகிய படங்களை இயக்கியவர் ராம்பாலா.

நண்பர்களுடன் venkat
நண்பர்களுடன் venkat

”லொள்ளு சபாவில் நான் அறிமுகப்படுத்தின பலருக்கும் ஒற்றுமை இருக்கும். ஒவ்வொருத்தருமே ஒரு தனித்துவமான சாயல்ல இருப்பாங்க. வித்தியாசமான தோற்றம், உடல்வாகு, பேச்சு இப்படி எல்லாமே வித்தியாசமா இருக்கறவங்களைத்தான் ‘லொள்ளு சபா’க்குள் கொண்டு வந்திருப்பேன்.

‘லொள்ளு சபா’ புகழ் பெற ஆரம்பித்த சமயத்தில்தான் விஜய் டி.வி.யில் இருந்த நண்பர் ஒருத்தர் வெங்கட் ராஜை அழைத்து வந்தார். வெங்கட் ராஜ், அடிப்படையில் டைப் ரைட்டர் மெக்கானிக் ஆக இருந்தவர். கம்ப்யூட்டர் சென்டர்கள் வருகை அதிகரித்த காலகட்டத்துல டைப் ரைட்டர் மெக்கானிக்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைவாகிடுச்சு.

‘சில டிராமாக்கள்ல நடிச்சிருக்கேன். நடிக்க வாய்ப்புக் கொடுங்க’னு கேட்டார். எனக்கு அவரைப் பார்த்ததும் பிடிச்சு போச்சு. அந்தக் கால நடிகர்கள் ஓமக்குச்சி நரசிம்மன், ஒருவிரல் கிருஷ்ணராவ் இவங்க சாயல்ல தெரிஞ்சார். ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒல்லியான உடம்பு இருந்தாலும் தனித்துவமான மேனரிசங்கள் அவங்ககிட்ட இருக்கும்.

அப்படி ஒரு ரோலை மனசுல வச்சு, வெங்கட் ராஜைப் பயன்படுத்தியிருப்பேன். லொள்ளு சபாவின்போது அதிக டேக் போயிடக்கூடாது. ஒரே டேக்கில் நடிச்சு ஓகே செய்திட வேண்டும் என்கிற பதற்றம் அவர்கிட்ட இருக்கும். ‘லொள்ளு சபா’வின் ‘அலைபாயுதே’வில் ‘செப்டம்பர் மாதம்..’ பாடலுக்கு இவர் ஒரு சின்ன டவலைக் கட்டிக்கிட்டு ஆடியிருப்பார். அது பயங்கர ரீச் ஆகிடுச்சு.

இன்னொரு படத்தின்போது ‘நீ ஓகே சொல்லு, நான் புகுந்து புகுந்து அடிக்கிறேன்’னு சொல்லி கம்பிகளுக்கிடையே புகுந்து வந்து லந்து செய்வார். அதுவும் செம ஹிட்.

rambala
rambala

சந்தானம், யோகிபாபு இவங்கள்லாம் ‘லொள்ளு சபா’வில் இருந்து வெளியே வந்ததும் தங்களது திறமைகளை வளர்த்துக்கிட்டாங்க. கடினமான உழைப்பைக் கொடுத்ததால்தான் அடுத்தடுத்த கட்டத்துக்குப் போனாங்க. இன்னொரு விஷயம், தங்களோட உடல் நலத்தையும் பேணனும்” என்று வேதனையுடன் சொன்னார் இயக்குநர் ராம்பாலா.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.