நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள போர்த்தியாடா பகுதி தனியார் தேயிலைத் தோட்டத்தில் காயத்துடன் புலி ஒன்று நடமாடி வருவதை உள்ளூர் மக்கள் கடந்த வாரம் பார்த்துள்ளனர். செல்போன்களில் பதிவு செய்து வனத்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அந்த பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் டிரோன் கேமிராக்கள் உதவியுடன் புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். தெர்மல் டிரோன் எனப்படும் இரவில் உயிரினங்களை அடையாளம் காணும் கேமிராக்கள் மூலம் புலியின் இருப்பிடத்தை கண்டறிந்து கண்காணிக்கத் தொடங்கினர்.

அந்த புலியின் உடலில் காயங்கள் இருப்பதை உறுதி செய்ததுடன் வேட்டைத் திறனை இழந்து நடமாட முடியாமல் தவிப்பதையும் கண்டறிந்தனர். 5 நாள்களாக தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், நேற்று காலை அந்த புலி இறந்ததையும் உறுதி செய்துள்ளனர். கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் அந்த புலியின் உடலை கூறாய்வு செய்து உடல் பாகங்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் அதே இடத்தில் வைத்து அந்த புலியின் உடலை எரித்து சாம்பலாக்கியிருக்கிறார்கள்.
காயத்துடன் தவித்த அந்த புலியைப் பிடித்து சிகிச்சை அளிக்கவோ அல்லது இரை, தண்ணீர் போன்றவற்றை வழங்க வனத்துறை முயற்சி எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. ஆனால், அது போன்ற செயல்களில் ஏன் ஈடுபடவில்லை என்பது குறித்து நீலகிரி கோட்ட வனத்துறை தற்போது விளக்கமளித்திருக்கிறது.

இதன் பின்னணி குறித்து தெரிவித்துள்ள வனத்துறையினர், “புலிகள் பாதுகாப்பைப் பொறுத்தவரை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மட்டுமே பின்பற்ற முடியும். வாழிட எல்லைகளை தக்கவைத்துக் கொள்ள அல்லது புதிய எல்லைகளைப் கைப்பற்ற ஆண் புலிகளுக்கு இடையே மோதல்கள் நடப்பது இயல்பான ஒன்று.
அந்த மோதலில் வலிமை வாய்ந்த புலி வெல்லும்… மற்ற புலி இறக்கும் அல்லது கடுமையான காயங்களுடன் உயிர் பிழைக்கும். அப்படி உயிர் பிழைக்கும் புலி அந்த எல்லையை விட்டு வெளியேறும். காயங்களுடன் அப்படி வெளியேறும் புலிக்கு சிகிச்சை அளிப்பது, உணவளிப்பது இயற்கைக்கு எதிரான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 6 வயதான இந்த இளம் ஆண் புலியும் எல்லை மோதலில் ஏற்பட்ட தோல்வியால் படுகாயங்களுடன் வனத்தை விட்டு வெளியேறியிருக்கிறது.

அதைப் பிடித்து சிகிச்சை அளிப்பது தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறும் செயலாகும். அதன் காரணமாகவே இது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. ஆனால், அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தோம். கடுமையான காயங்கள் காரணமாகவே அந்தப் புலி உயிரிழந்தது” என்றனர்.