தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய யு19 அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. கேப்டன் ஆயுஸ் மாத்ரேவிற்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், இத்தொடரில் இந்திய அணியை சூர்யவன்ஷி வழிநடத்துகிறார்.
இவ்விறு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 49.3 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜேசன் ராவ்ல்ஸ் (114; 113 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) சதம் அடித்தார். இந்திய அணி பந்து வீச்சாளர்களில், கிஷன் குமார் சிங் 4 விக்கெட்டுகளையும், ஆர்.எஸ். அம்ப்ரிஷ் 2 விக்கெட்டுகளையும், கனிஷ்க் சவுகான், கிலான் படேல் மற்றும் தீபேஷ் தேவேந்திரன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
246 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி சிக்சர் மழை பொழிந்தார். 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். மொத்தம் 24 பந்துகளில் விளையாடிய வைபவ் 68 (10 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி) ரன்கள் எடுத்தார்.
மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் தடைபட்ட நிலையில், இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 174 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்தியா 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.