தற்போது, சென்சார் சான்றிதழ் பற்றிய பேச்சுதான் தீயாய் இருந்து வருகிறது.
விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ பொங்கல் பண்டிகை ரிலீஸாக திரைக்கு வரும் என அறிவித்திருந்தனர்.
ஆனால், இப்போது வரை படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி ‘ஜனநாயகன்’ படக்குழு நீதிமன்றத்தை நாடியிருக்கிறது.

தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன், “படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய காட்சிகள் குறித்துப் புகார் வந்துள்ளதாகவும் அதனடிப்படையில் தான் படத்தை மறு தணிக்கை குழுவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக” கூறினார்.
இதனையடுத்து, ஜனநாயகன் படத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், ஒரு படத்திற்கு எப்படி சென்சார் வழங்கப்படும், எப்படியான சமயங்களில் சான்றிதழ் கிடைக்கத் தாமதமாகும், எப்படியான படங்களுக்கு சான்றிதழ் மறுக்கப்படும் என சென்சார் செயல்முறை தொடர்பாக முழுமையாக அறிந்துகொள்ள முன்னாள் தணிக்கைக் குழு அதிகாரியும், இயக்குநருமான ஞான ராஜசேகரனை அழைத்தோம்.
ஒவ்வொன்றாக நமக்கு எடுத்துரைத்த இயக்குநர் ஞான ராஜசேகரன், “திரையரங்குகளில் வெளியாகப்போகும் படத்தை தணிக்கைக்குழுவின் ரீஜினல் ஆபீசர் தலைமையில் ஐந்து பேர் பார்ப்பார்கள்.
இந்தக் குழுவில் ரீஜினல் ஆபீசர் உட்பட இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் இருப்பார்கள். அவர்கள் வெளிவரவிருக்கும் படத்தைப் பார்த்து அப்படத்தில் நீக்க வேண்டிய காட்சிகளை, நீக்க வேண்டிய ஆடியோக்களைப் பட்டியலிடுவார்கள்.
பிறகு, தயாரிப்பாளர், இயக்குநர், தணிக்கைக் குழு அதிகாரி என அனைவரும் இணைந்து நீக்க வேண்டிய காட்சிகள் குறித்தும், படத்திற்கான சான்றிதழ் குறித்தும் டிஸ்கஸ் செய்வார்கள்.

தணிக்கைக்குழு அதிகாரிகள் கட் செய்யச் சொன்னதற்கான காரணத்தை விளக்கும்போது, உங்களுடைய வாதத்தையும் முன்வைக்கலாம். அது ஏற்றுக்கொள்ளும்படியானதாக இருந்தால், உங்களுடைய முடிவையும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
அதன் பிறகு தணிக்கைக்குழு பரிந்துரைத்த காட்சிகளை படக்குழு நீக்க வேண்டும். படக்குழுவினர் அதனை கட் செய்த பிறகு மற்றொரு உறுப்பினர், அந்தக் கட்களை சரிபார்க்க நியமிக்கப்படுவார்.
ஒரு காட்சியில் வன்முறை அதிகமாக இருக்கிறதென, 20 சதவீத வன்முறையைக் குறைக்கச் சொல்லியிருந்தால், அந்த அளவையும் இந்த புதிய உறுப்பினர் சரிபார்ப்பார். தணிக்கைக்குழு பரிந்துரைத்த அளவிற்கு நீங்கள் காட்சிகளை நீக்கவில்லை என்றால் மீண்டும் அதனை குறைக்கச் சொல்வார்கள்.” என்றார்.
மேலும் விளக்கியவர், “இப்போது தணிக்கைக்குழு நீக்கச் சொல்லும் கட்களில் உங்களுக்கு உடன்பாடில்லை என்றால், நீங்கள் அதன் பிறகு ரிவைசிங் கமிட்டிக்குச் செல்லலாம். அங்கு 9 பேர் கொண்ட குழு படத்தை முழுமையாகப் பார்ப்பார்கள்.
இதில் ரீஜினல் ஆபீசரும் இருப்பார். படத்தை அவர்கள் முழுமையாகப் பார்த்த பிறகு, ரிஜினல் ஆபிசருடன் டிஸ்கஸ் செய்வார்கள். சில சமயங்களில் தணிக்கைக்குழு சொன்ன கட்களை நீக்கத் தேவையில்லை என்றுக்கூட சொல்லலாம்.
சில நேரங்களில், தணிக்கைக்குழு கொடுத்ததைவிட அதிகமான கட்களை ரிவைசிங் கமிட்டி பரிந்துரைக்கலாம். ரிவைசிங் கமிட்டி சொல்லும் கட்களிலும் படக்குழுவினருக்கு உடன்பாடில்லை என்றால் உயர்நீதிமன்றத்திற்குச் செல்லலாம்.

மத்திய அரசு நியமிக்கும் ஆட்கள்தான் தணிக்கைக் குழுவில் இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், ஒரு படத்தைப் பார்க்கும்போது எந்தச் சார்பும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்பதுதான் விதி.
ஒரு சில கட்களை மட்டுமே மேற்கொள்ள வேண்டிய திரைப்படங்கள், அடுத்த நாளே வந்து தணிக்கைச் சான்றிதழை வாங்கிச் செல்வார்கள். நான் தணிக்கைக் குழுவில் இருந்தபோது, அப்படிப் பெற்றிருக்கிறார்கள்.
ஆனால், அதிகமான கட்களைத் தணிக்கைக் குழு சொல்லும்போது, அதனை மேற்கொள்ள நேரமெடுக்கும். பரிந்துரைத்த கட்களை நீக்கிய பிறகு, மீண்டும் படத்தைச் சமர்ப்பித்து தணிக்கைச் சான்றிதழைப் பெறுவார்கள்.
நான் தணிக்கைக் குழுவில் இருக்கும்போது, சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது என்பது மிகக் குறைவு.
இப்போது நடந்துகொண்டிருப்பதுபோல, அப்போது அரிதாகத்தான் நடக்கும். ஆனால், இப்போது ‘ஜனநாயகன்’ படத்திற்குச் சான்றிதழ் வழங்கப்படுவதில் ஏற்படும் தாமத்திற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை.
ஆனால், தணிக்கைக் குழு சொன்ன கட்களை நீங்கள் செய்த பிறகும் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றால், அது தவறானதுதான்.

காட்சிகளை நீக்கி நீங்கள் மீண்டும் படத்தைச் சமர்ப்பித்த பிறகு தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு.
சில சமயங்களில், படக்குழுவினர் கட்களை ஏற்கவோ, மறுக்கவோ இல்லாமல் யோசித்துவிட்டு வருகிறோம் என்பார்கள். அப்படியான சமயங்களில் தாமதம் ஏற்படும்.
பட ஸ்கிரீனிங் முடிந்த 2 மணி நேரத்திற்குள்ளாகவே நீக்க வேண்டிய காட்சிகளைத் தணிக்கை குழு அதிகாரிகள் பரிந்துரைத்துவிடுவார்கள்.” எனத் தொடர்ந்து பேசியவர், “தணிக்கை குழுவிலிருப்பவர் அரசியல் கட்சியைச் சார்ந்தவராக இருப்பதால், அவர்கள் சொல்லும் கட்களில் அரசியல் சார்ந்த காட்சிகள் இருக்கலாம். எப்போதுமே தணிக்கை குழுவினர் மூன்று வழிகளில் யோசிப்பார்கள்.
ஒரு படத்தை எடுத்தபடியே மக்களுக்குக் காட்டலாமா? சில விஷயங்களைக் கட் செய்து காட்டலாமா? மக்களுக்குக் காட்டுவதற்கு இது தகுதியான திரைப்படமா? என மூன்று வகைகளில் சிந்திப்பார்கள்.
சில படங்களுக்கு 100 கட்களுக்கு மேல் பரிந்துரைக்கும் சூழல் வரும். 100 கட்கள் செய்தால், அந்தப் படத்தில் எதுவும் இருக்காது.
அதனால், அதற்குத் தணிக்கைச் சான்றிதழை மறுப்பார்கள். நான் ‘பெரியார்’ திரைப்படத்தை எடுக்கும்போது, தணிக்கை செய்யும் விதிகள் எனக்குத் தெரியும்.

அப்படத்தில் ஒரு கட் கூட அதிகாரிகள் செய்யச் சொல்லவில்லை. இன்று ‘கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ்’ எனப் பல படைப்புகள் வருகின்றன. அப்படைப்புகளை மத்திய அரசே ஊக்குவிக்கிறது.
தணிக்கைக் குழுவிலிருக்கும் உறுப்பினர்கள் மூலம் அரசியல் வந்துவிடுகிறது. தணிக்கைக் குழுவில் தகுதியற்ற ஆட்களைச் சில சமயங்களில் உறுப்பினராக்கிவிடுகிறார்கள்.
அரசியல்வாதிகள் சிலர், அவர்களுக்கு ஆதரவான நபர்களை இங்குக் கொண்டுவந்து பதவியில் அமர்த்திவிடுகிறார்கள்.
அவர்களை வைத்து நாங்கள் அப்போது கஷ்டத்தை அனுபவித்திருக்கிறோம். முதிர்ச்சியடைந்த ஆட்கள் இதிலிருந்தால் நியாயமான விஷயங்கள் நடக்கும்.” எனக் கூறினார்.