`அன்புமணியின் கூட்டணிப் பேச்சுவார்த்தை சட்ட விரோதமானது' – பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியிகளின் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. அதன் அடிப்படையில், பா.ம.க தலைவர் அன்புமணி இன்று காலை எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, என்.டி.ஏ கூட்டணியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அன்புமணியும் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்தினர்.

இந்த நிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தன் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு பாட்டாளி மக்கள் கட்சிக்கு மருத்துவர் அய்யா மட்டுமே நிறுவனத் தலைவராக இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார்.

எடப்பாடி - அன்புமணி
எடப்பாடி – அன்புமணி

17.12.2025 முதல் மருத்துவர் அய்யாவே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியுடன் தேர்தல் கூட்டணி என்று அன்புமணியுடனோ அல்லது வேறு எவரிடமோ எந்த அரசியல் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இயலாது. மருத்துவர் அய்யா மட்டுமே செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் தேர்தல் கூட்டணி பேசும் அதிகாரம் பெற்றவர். இந்நிலையில் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அப்படி ஒரு கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்ட விரோதம். கட்சி விதிப்படி மருத்துவர் அய்யா மட்டுமே யாருடனும் கூட்டணி பேச உரிமை உள்ளவர்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.