ஆதார் கார்டு பிளாஸ்டிக் அட்டைக்கான கட்டணம் திடீர் அதிகரிப்பு: எவ்வளவு தெரியுமா?

புதுடெல்லி,

ஆதார் கார்டு என்பது தற்போது தவிர்க்க முடியாத அடையாள ஆவணமாக உள்ளது. பள்ளி அட்மிஷன் முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் பிரதானமாக ஆதார் எண்ணே கேட்கப்படுகிறது. 12 இலக்கங்கள் கொண்ட இந்த ஆதார் அட்டையை செல்லும் இடமெல்லாம் எடுத்து செல்ல ஏதுவாக, பிவிசி (PVC) எனப்படும் பிளாஸ்டிக் ஆதார் அட்டையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்தில் விண்ணப்பித்து இந்த பிவிசி ஆதார் அட்டையை வாங்கிக் கொள்ள முடியும். இதற்கான கட்டணம் இதுவரை 50 ரூபாயாக இருந்தது.

இந்நிலையில், கடந்த 1-ஆம் தேதி முதல் அந்த கட்டணத்தை உயர்த்தி இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதிய ஆதார் அட்டை பெற விண்ணப்பிப்போர் இனி 75 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். வரி மற்றும் டெலிவரி கட்டணம் ஆகிய இரண்டும் இந்த 75 ரூபாய் கட்டணத்தில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக பிளாஸ்டிக் ஆதார் பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இ-ஆதார், பேப்பர் ஆதார் போலவே பிளாஸ்டிக் ஆதாரும் செல்லத்தக்க ஆவணமாகவே கருதப்படுகிறது.

ஆதார் ஆணையத்தின் இணையதளத்தில் பிவிசி ஆதாருக்கு விண்ணப்பித்தால், 5 பணி நாட்களுக்குள் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கே ஸ்பீடு போஸ்ட்டில் அனுப்பப்படும்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.