முன்னாள் இந்திய அணியின் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை ஓப்பனராக களமிறக்கிய கோவாவின் புதிய முயற்சி, விஜய் ஹசாரே டிராபியில் தோல்வியை தழுவி உள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது போட்டியில் ஓப்பனராக களமிறங்கிய அர்ஜுன் டெண்டுல்கர், மீண்டும் மீண்டும் சொதப்பி உள்ளார். அவரால் பேட்டிங்கில் போதிய இம்பாக்டை வழங்க முடியவில்லை. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், அவர் வெறும் 8 பந்துகளில் 1 ரன் மட்டுமே அடித்து, சுக்தீப் பஜ்வாவால் பந்தில் அவுட் ஆனார். முதல் முறையாக மும்பைக்கு எதிராக ஓப்பனராக களமிறங்கிய அர்ஜுன் டெண்டுல்கர் 24 ரன்கள் எடுத்தார். அதை தொடர்ந்து உத்தரகாண்டுக்கு எதிராக 8 ரன்களும், சிக்கிமுக்கு எதிராக 19 ரன்களும் எடுத்தார்.
Add Zee News as a Preferred Source

அர்ஜுன் டெண்டுல்கரின் கடைசி நான்கு போட்டிகள்
– கோவா vs உத்தரகாண்ட்: பேட்டிங் 8, பந்துவீச்சு 0/54
– கோவா vs மும்பை: பேட்டிங் 24, பந்துவீச்சு 0/78
– கோவா vs சிக்கிம்: பேட்டிங் 19, பந்துவீச்சு 0/49
– கோவா vs ஹிமாச்சல்: பேட்டிங் 1, பந்துவீச்சு 0/58
யோக்ராஜ் சிங்கின் விமர்சனம்
முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், அர்ஜுன் டெண்டுல்கருக்கு தவறான பயிற்சி அளிக்கப்படுவதாக கூறியுள்ளார். அர்ஜுனின் பந்துவீச்சிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, ஆனால் அவர் உண்மையில் ஒரு முழுமையான பேட்ஸ்மேன் என்று யோக்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அர்ஜுன் தனது அகாடமியில் பயிற்சிக்கு வருவதற்கு முன்பு பேட்டிங் செய்ய போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறியதாக யோக்ராஜ் தெரிவித்துள்ளார். “அனைவரும் அவரது பந்துவீச்சில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். பயிற்சியாளர்களுக்கு என்ன பிரச்சனை என்று எனக்கு தெரியவில்லை. அடிப்படையில், அவர் ஒரு பேட்ஸ்மேன். அவர் எனது அகாடமி கேம்பிற்கு வந்த போது, அவரை கவனித்துக்கொள்ளும்படி என்னிடம் கேட்டார்கள்.

பயிற்சியின் பலன்
ஒரு நாள் அவர் பயிற்சியின் போது அடிபட்டு, நான் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அதன் பிறகு அவர் நன்றாக இருந்தார். பிறகு நான் அவரிடம் பேட்டிங் செய்ய சொன்னேன், அப்போது அவர் தனக்கு பேட் செய்ய வாய்ப்பு கொடுப்பதில்லை என்று கூறினார். தனது அகாடமியில் சுமார் ஒரு வாரம் பேட்டிங் செய்த பிறகு, அர்ஜுன் ரஞ்சி டிராபி அறிமுகத்தில் சதம் அடித்தார். நான் அவர் பேட்டிங் செய்வதை பார்த்ததில்லை, எனவே நாங்கள் இன்டோர் நெட்ஸுக்கு சென்றோம். அவர் அங்கு அக்னியாக இருந்தார், பந்துகளை சிதறடித்தார். நான் அவரது பயிற்சியாளரிடம், ஏன் அவருக்கு பேட் செய்ய வாய்ப்பு கொடுக்கவில்லை? என்று கேட்டேன், ஆனால் அவர் சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டிருந்தார்” என்று யோக்ராஜ் கூறி உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் கோரிக்கை
யோக்ராஜ், அர்ஜுனின் முன்னாள் ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸிடம் சில போட்டிகளில் அவரை ஓப்பனராக விளையாட அனுமதிக்குமாறு கோரியதாகவும், ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். “நான் அவர்களிடம், அர்ஜுன் ஒரு முழுமையான பேட்ஸ்மேன் என்றும், அவர் தனது தந்தையை போல விளையாடுகிறார் என்றும் கூறினேன். எனவே, அர்ஜுன் எனது அகாடமியில் ஒரு வாரம் பேட் செய்தார், சில நாட்களுக்கு பிறகு ரஞ்சி டிராபியில் நூறு ரன்கள் எடுத்தார். அவர் மும்பை இந்தியன்ஸுக்காக விளையாடும்போது கூட, நான் நிர்வாகத்திடம் சில போட்டிகளில் அவரை ஓப்பன் செய்ய சொன்னேன், ஆனால் அவர்கள் கேட்கவில்லை” என்று அவர் கூறி உள்ளார்.
அர்ஜுன் டெண்டுல்கர் புள்ளிவிவரங்கள்
அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது ஃபர்ஸ்ட்-கிளாஸ் கிரிக்கெட்டில் 21.37, லிஸ்ட் A கிரிக்கெட்டில் 18.25 மற்றும் டி20களில் 13.50 சராசரி மட்டுமே வைத்துள்ளார். தற்போது ஓப்பனர் பரிசோதனை தோல்வியடைந்த நிலையில், அர்ஜுனுக்கு பேட்டிங் ஆர்டரில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அவரது பந்துவீச்சு திறன்களும் மேம்பாடு தேவைப்படுகின்றன, சமீபத்திய போட்டிகளில் விக்கெட் எடுக்காமல் அதிக ரன்களை வாரி வழங்கி உள்ளார்.
About the Author
RK Spark