49-வது புத்தகக் காட்சி: `எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும்..!' – முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 49-வது புத்தகக் காட்சியை, Ymca மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை (08-01-2026) தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய அவர், “அறிவு சங்கமத்தை, அறிவு திருவிழாவை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சிந்தனை ஊற்று பெருக்கெடுக்க புத்தகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து ஏற்பாடு செய்து வரும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கத்தினர், பதிப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 1977-ல் தொடங்கிய இந்த அறிவுப்பணி தற்போது 49 வது ஆண்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.13 அரங்குகளுடன் தொடங்கப்பட்ட புத்தக கண்காட்சி இன்று 900 புத்தக அரங்குகளுடன் அமைந்திருப்பது இதன் வெற்றியாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு மக்கள் அதிக அளவு வரவேண்டும் என்பதற்காக நுழைவு கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது, வரவேற்கத்தக்கது. நம்முடைய எண்ணமெல்லாம் தமிழ் சமூகம் அறிவில் சிறந்த சமூகமாக உலக அளவில் மதிக்கப்பட வேண்டும். அதற்கான அறிவு புரட்சி ஏற்படுத்த நம் மண்ணில் தோன்றியது தான் திராவிட இயக்கம். இந்த அறிவு புரட்சிக்கு வித்திட்ட கருவிகள் தான் இந்த புத்தகங்கள். அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் `எனது வாரிசுகள் புத்தகங்கள் தான்’ என்று கூறினார். பேரறிஞர் அண்ணா அவர்கள் வீட்டிற்கு ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்று கூறினார்.

கலைஞர் அவர்கள் புத்தகங்கள் மூலம் உலகைப் படியுங்கள் என்று கூறினார். அறிவுக்கான தீ பரவட்டும் என்று அவர்கள் சொன்ன கட்டளையில் தான் திராவிட மாடல் ஆட்சி பயணிக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் 2017 இல் இருந்து என்னை சந்திக்க வருபவர்களும் பொன்னாடையோ பூங்கொத்தோ கொடுக்கக்கூடியவர்கள்… அதற்கு பதிலாக புத்தகங்களை கொடுங்கள் என்று நான் சொன்னேன்.

அப்படி பெறப்பட்ட நூல்களை அண்ணா அறிவாலயத்தில் இருக்கக்கூடிய பேராசிரியர் ஆய்வு நூலகங்கள் மூலமாக அந்தப் புத்தகங்களைக் கேட்டு எனக்கு கடிதம் எழுதிய மாணவர்கள், இளைஞர்கள், படிப்பு வட்டங்கள் நூலகங்களுக்கு தொடர்ந்து அனுப்பி வருகிறேன். அப்படி வழங்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டும். தமிழகம் மட்டுமல்ல, தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அந்தந்த நாடுகளுக்கும் அனுப்பி இருக்கிறோம். அண்மையில்கூட வள்ளுவர் கோட்டத்தில் திமுக சார்பில் அறிவு திருவிழா நடைபெற்றது.

அரை நாள் செலவழித்து அங்கு சென்று புத்தக அரங்கங்களை பார்வையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நேரம் சென்றதே தெரியவில்லை. ஏராளமான புத்தகங்களை வாங்கி சென்றதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்படி வாங்குகிற புத்தகங்கள் நமக்கும் நம் சமூகத்திற்கும் எதிர்காலத்திற்கும் விலை மதிக்க முடியாத சொத்தாக அமைகிறது. திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக மட்டும் இன்றி ஆட்சி ரீதியாகவும் புத்தகங்கள் மக்களை சென்றடைய பல பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

முக்கியமான சிலவற்றை சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் சென்னை கன்னிமாரா நூலகத்தில் நிரந்தர புத்தகக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. புத்தக கண்காட்சி ஆண்டு முழுவதும் நடத்த, 75 லட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளோம். கொரோனா காலகட்டத்தில் பதிப்பாளர்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் திமுக சார்பில் 50 லட்சம் நிதி வழங்கினோம்.

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் புத்தக காட்சிகளை நடத்துவதற்கு காரணம் திமுக அரசு தான். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் புத்தகக் காட்சி அமைத்திருக்கிறோம். பன்னாட்டு புத்தகக் கண்காட்சிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். தமிழில் இருந்து வேறு மொழிகளுக்கு மொழிபெயர்க்கவும் மற்ற மொழிகளில் உள்ள நூல்களை தமிழில் மொழிபெயர்க்கவும் முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இதையெல்லாம் மிஞ்சும் வகையில் 218 கோடியில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைத்து இருக்கிறது இந்த அரசு. 2007 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் 2010 இல் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்தப் பயணத்தை இந்த அரசு மிக வேகமாக கொண்டு செல்கிறது. 2023 இல் தொடங்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இதுவரை 24 லட்சம் பார்வையாளர்கள் வந்து சென்றிருக்கின்றனர்.

இதுதான் தமிழர்கள் புத்தகத்தின் மீது வைத்திருக்கும் பற்றுக்கு சாட்சி. இந்த அறிவுத்திடலையும் வாசிப்பு பழகத்தையும் அதிகரிக்க வேண்டும் என்ற முயற்சியில் தான் திருச்சியில் காமராஜர் அறிவுலகம், கோவையில் பெரியார் அறிவுலகம், திருநெல்வேலியில் காயிதே மில்லத் அறிவுலகம், திருச்சியில் காமராஜர் அறிவுலகம், சேலத்தில் பாரதிதாசன் அறிவுலகம், கடலூரில் அஞ்சலை அம்மாள் அறிவுலகம் என அமைத்து வருகிறோம். இது மட்டுமல்லாமல் பழைய நூலகங்களையும் நூல்களையும் புதுப்பித்து வருகிறோம்.

உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 604 நூலகங்களை கட்டி உள்ளோம். 1469 நூலகங்களுக்கு வைஃபை வசதி செய்து கொடுத்துள்ளோம். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை இலக்கியத் திருவிழா, நெல்லையில் பொருநை கோவையில் சிறுவாணி, திருச்சியில் காவேரி, மதுரையில் வைகை என்கின்ற பெயர்களில் இலக்கியத் திருவிழாக்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதுமட்டுமல்லாமல் நூல்கள் நாட்டுடைமை ,எழுத்தாளர்களுக்கு பிறந்தநாள் விழா, குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு, திராவிட களஞ்சியம் உருவாக்கம், இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது, உலக பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கைகள், நூலகங்களுக்கு சிற்றிதழ்கள், உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம், திசை தோறும் திராவிடம் என்கிற பெயரில் எழுத்தாளர்களுக்கு பல நலத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதையெல்லாம் தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு இளைஞர்கள் சந்தித்தால் புத்தகங்களை மையமாகக் கொண்டுதான் கலந்துரையாடல் அமைய வேண்டும். புத்தகங்களைப் பற்றி விவாதிப்பதற்கு வாசிப்பு பழக்கங்கள் அதிகரிக்க வேண்டும்.

இன்று வளர்ந்து இருக்கக்கூடிய தொழில்நுட்பம் புத்தகங்களை செல்போன் மூலமாகவே படிக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. நவீன தொழில்நுட்ப யுகத்தில் புத்தகங்கள் பல மின் வடிவில் மாறினாலும் அதைத் தொட்டு படிக்கக்கூடிய இன்பமே தனியானது. இதனால் ஏற்படும் விளைவு , அறியாமை என்னும் இருள் விலக வேண்டும். இளைஞர்களுக்கு நான் சொல்வது எல்லாம், தமிழும் தமிழர்களும் வளர வேண்டுமென்றால் புத்தகங்களை இறுக பற்றி கொள்ளுங்கள். வெளிநாடுகளில் செல்லும்போதெல்லாம் பொது இடங்கள் பூங்காக்கள் என பயணங்களின் போது கூட புத்தகங்களை வாசித்துக் கொண்டே செல்வதை நான் பார்த்து வருகிறேன். ஆனால் இங்கு அதற்கு மாறாக இருக்கிறது இந்த சிந்தனை மாற வேண்டும். உங்களுடைய சிந்தனைகள் வளர வளர தான் தமிழ்நாடு மேல்நோக்கி செல்லும். இங்கிருந்து நாம் முன்னோக்கி தான் செல்ல வேண்டும்.

யாரும் நம்மை வீழ்த்த முடியாது. அதனால் ஒரு மணி நேரமாவது புத்தகம் படிக்கும் பழக்கத்தை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும். எண்ணங்களை எழுத்தாக்கும் முயற்சியில் ஈடுபட இது போன்ற புத்தகக் கண்காட்சிகள் நிச்சயம் கை கொடுக்கும்.

சென்னை மட்டுமல்லாது சென்னை சுற்றியுள்ள அனைத்து மாவட்ட மக்களும் இந்த புத்தக கண்காட்சிக்கு வர வேண்டும் அது மட்டும் அல்ல அவரது குழந்தைகளுக்கும் புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும். புத்தகக் காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டும் ஆனது அல்ல அனைவருக்கும் ஆனது. வாசிப்பு பழக்கம் மலரவும், சமூகம் முன்னோக்கி நகரவும், படைப்புகள் உருவாகவும் இந்த அரசு எப்போதும் உங்களுடன் துணை நிற்கும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.