Jana Nayagan: "வெறுப்பு பிரசாரங்களை ஒதுக்கிவிட்டு; கலையை காப்பாற்றுவோம்!" – கார்த்திக் சுப்புராஜ்

ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வரவிருந்த விஜய்யின் ‘ ஜனநாயகன்’ திரைப்படம், சென்சார் சான்றிதழ் கிடைக்காததனால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

‘ஜனநாயகன்’ ரிலீஸுக்கு அடுத்த நாள் திரைக்கு வரவிருக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்திற்கும் இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததனால், படத்திற்கான முன்பதிவும் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது.

Jana Nayagan - Vijay
Jana Nayagan – Vijay

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்க தாமதவதற்கு பின்னால் மத்திய அரசின் அரசியல் நோக்கங்கள் காரணமாக இருக்கலாம் என்ற விவாதம் சூடு பிடித்திருக்கிறது.

திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் எனப் பலரும் விஜய்க்கு ஆதரவாக அவர்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தமிழ் சினிமாவுக்கு இது கடின காலமாக இருக்கிறதென குறிப்பிட்டு அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், “சினிமா பிரியராக என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துக் கொள்கிறேன். குறைந்த பட்ஜெட் சுயாதீன படமான ‘சல்லியர்கள்’ படத்திற்கு திரையரங்குகள் இல்லை.

சென்சார் தாமதம் காரணமாக விஜய் சார் போன்ற பெரிய நட்சத்திரம் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுகிறது.

மற்றொரு பெரிய பட்ஜெட் திரைப்படமான ‘பராசக்தி’ படத்தை நாளை மறுதினம் வெளியாவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், சான்றிதழ் பிரச்னை காரணமாக புக்கிங் இன்னும் தொடங்கவில்லை.

இது சினிமாவுக்கு கடினமான காலம்! திரையரங்குகள் குறைந்தப் பட்ஜெட்டில் உருவாக்கப்படும் சுயாதீன படங்களுக்கு அதிக ஆதரவு அளிக்க வேண்டும். ஏனெனில் பெரிய சாட்டிலைட் மற்றும் ஓடிடி நிறுவனங்கள் சுயாதீனப் படங்களை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை.

குறைந்த பட்ஜெட் படங்களுக்கு வருவாய்க்கு திரையரங்குகளே ஒரே ஆதாரமாக உள்ளன. குறைந்த பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கொடுக்காமல் இருப்பது உண்மையிலேயே சினிமாவை கொல்லும் செயல்.

பெரிய பட்ஜெட் படங்களுக்கு, சென்சாருக்கான கடுமையான கால அட்டவணை விதிகளை பின்பற்றுவது மிகக் கடினம்.

தற்போதைய இந்திய மற்றும் வெளிநாட்டு சென்சார் கால விதிகளின்படி, படத்தை முழுமையாக 3 மாதங்களுக்கு முன்பே முடிப்பதுதான் வெளியீட்டு சிறந்தது.

Karthik Subbaraj
Karthik Subbaraj

இது பல காரணங்களால் மிகவும் சாத்தியமற்றது. இதை சீரமைத்து படைப்பாளிகளுக்கு சற்று எளிதாக்க வேண்டும்.

இல்லையெனில் பண்டிகை தேதிகளில் நிகழும் பெரிய படங்களின் ஒத்திவைப்பு இறுதியில் தொழிலை அழித்துவிடும்.

தயவுசெய்து திரைப்பட சமூகத்தில் உள்ள அனைவரும் ரசிகர் போர்கள், அரசியல் காரணங்கள், வெறுப்பு பிரச்சாரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்றிணைந்து நேர்மறையானதை செய்து கலையை காப்பாற்றுவோம். சினிமாவை காப்பாற்றுவோம்!” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.