அட! U டர்ன் இண்டிகேட்டர் செமயா இருக்கே! – ஒண்ணேகால் கோடி ரூபாய்தான்; இது என்ன கார் தெரியுமா?

சும்மா ஒரு ஞாயிறன்று சோஷியல் மீடியாவை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தபோதுதான், அந்த ரீலைப் பார்த்தேன். பெரிய கண்டுபிடிப்பெல்லாம் இல்லை; ஆனால் அசத்தலாகவும், சாலைப் பயனாளர்களுக்குப் பயனுள்ளதாகவும் இருந்ததுபோல் தெரிந்தது. 

கார் ஒன்று இடது பக்கம் இண்டிகேட்டர் போட்டுத் திரும்பியது பார்க்கவே அழகாக இருந்தது. ‛இதில் என்ன அழகு இருக்கு’ என்றால், அந்த U-Turn இண்டிகேட்டர்தான் ஹைலைட்டே! சாதாரண லைட் பிளிங்கிங் இல்லை; அம்புக்குறியெல்லாம் போட்டு U-Turn சிம்பலே இண்டிகேட்டராக ஒளிர்ந்தது அந்த இண்டிகேட்டர். 

இப்போதைய சிச்சுவேஷனில் இண்டிகேட்டர் ஆன் செய்தால், எந்தப் பக்கம் போகிறோம் என்று தெரியும். ஆனால், யு டர்ன் அடிக்கிறோமா, இடது லேனில் கட் அடிக்கிறோமோ என்று தெரியாதல்லவா? அப்படியென்றால், இது ஒரு நல்ல கண்டுபிடிப்புதானே! 

Hyundai Ioniq 5 – Crab Driving

சட்டென்று பார்த்தால், அந்தக் கார் லம்போகினியோ என்று நினைக்கத் தோன்றியது. ஆனால், அது ஒரு சீன நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் கார். பொதுவாக, ஆட்டோமொபைலில் இது மாதிரியான கண்டுபிடிப்புகளை முதலில் நடைமுறைக்குக் கொண்டு சீன நிறுவனமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. பல உதாரணங்களைச் சொல்லலாம். 

‛குதிக்கும் கார்’ ஒன்றைக் கொண்டுவந்து அதகளம் செய்தது சீன நிறுவனத்தைச் சேர்ந்த BYD கார் கம்பெனி. இதன் ஏர் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன்கள் மாயம் செய்யும். இன்னொரு சீன நிறுவனமான ஹூண்டாய், தனது ஐயனிக்5 எனும் எலெக்ட்ரிக் காரில் – 360 டிகிரி பார்க்கிங் வசதியைக் கொண்டு வந்தது. அதாவது – காரின் ரியர் வீல்கள் பக்கவாட்டில் திரும்பி, நண்டு மாதிரி நடக்கும்; பார்க்கிங் செம ஈஸியாகச் செய்து கொள்ளும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பிஒய்டி நிறுவனம், தனது காரின் சஸ்பென்ஷனைச் சோதிக்கும்விதமாக, காலி ஒயின் கிளாஸ்களில் தண்ணீரை ஊற்றி – அதை பானெட்டில் வைத்து – ஒரு சொட்டு நீர்கூடக் கீழே சிந்தாத வண்ணம் மேடு பள்ளங்களில் காரை ஓட்டிக் காட்டி அசத்தியது. தற்போது இதைத்தான் மஹிந்திராவின் எக்ஸ்யூவி  7XO காரில் முயற்சித்திருக்கிறார்கள். 

BYD Yangwang U8 – Water Car

இன்னும் சில மாதங்களுக்கு முன்பு – தண்ணீரில் படகாக மாறி வீல்களையே துடுப்பைப் போட்டுவிட்டு, அப்படியே கரை ஏறினால் வீல்கள் சாலையில் ஓட ரெடியாகும்படியான ஒரு டூ-இன்-ஒன் காரை லாஞ்ச் செய்து அதகளம் செய்ததும் இதே சீன நிறுவனம்.

இப்போது இந்த யு-டர்ன் இண்டிகேட்டர் சிக்னல். பார்க்கும்போது ஆஃப்டர் மார்க்கெட் ஆக்சஸரீஸாக இதை அந்த டிரைவர் பொருத்தியுள்ளதுபோல் தெரிகிறது. ஆனால், இது  ஃபேக்டரி ஃபிட்டட் சமாச்சாரம் போலவே தெரிவதுதான் ஸ்பெஷல். வலது பக்க ஸ்டீயரிங் ஸ்டாக்கை இரண்டு முறை தட்டினால், இந்த U டர்ன் இண்டிகேட்டர் எரியுமாம். 

சோஷியல் மீடியா முழுவதும், இந்த U டர்ன் ஸ்பெஷல் இண்டிகேட்டர் கார் பிரபலமாகி விட்டது. அந்தக் கார்  HiPhi Z எனும் ஹைப்பர் எலெக்ட்ரிக் கார்.  சீனாவைச் சேர்ந்த Human Horizons எனும் கார் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பு இது. HiPhi காரில் மொத்தம் X, Y, Z, A என்று 4 மாடல்கள் இருக்கின்றன. சோஷியல் மீடியாவில் வலம் வரும் அந்த மாடல் HiPhi Z. 1,05,000 யூரோவில் இருந்து இதன் எக்ஸ் ஷோரூம் விலை தொடங்குகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1.15 கோடி வருகிறது. இது தொடக்க விலைதான். 

HiPhi Z

ஹைப்பர் கார் என்றால், ஸ்போர்ட்ஸ் கார்களுக்கும் ஒரு படி மேலே! ஆம், இது வெறும் 3.8 விநாடிகளில் 0-100 கிமீ-யைத் தொட்டுவிடும்.  இதில் உள்ள டூயல் எலெக்ட்ரிக் மோட்டாரின் பவர் 672hp. டார்க் 410Nm. எலெக்ட்ரிக் காருக்கு இது வெறித்தனமான ஸ்பெக். இதிலுள்ள பேட்டரி, நம் ஊர் மஹிந்திரா கார்களைவிட 2 மடங்கு பெருசு. ஆம், 120kWh சக்தி கொண்ட, CTP (Cell to Pack) அடிப்படையில் ரெடியாகி இருக்கும் லித்தியம் பேட்டரி. WLTP படி இதன் ரேஞ்ச் 555 கிமீ என்று க்ளெய்ம் செய்கிறது இந்நிறுவனம். இது ஒரு 5 சீட்டர் எலெக்ட்ரிக் கிராண்ட் டூரர். 

HiPhi Z

நம் ஊர் கார்களில் NFC (Near Field Communication) மாதிரி இதில் இருப்பது NT (No Touch) தொழில்நுட்பம். அதாவது, காரைத் தொடாமலே கதவைத் திறந்து காரில் ஏறிக் கொள்ளலாம். இதன் ரியர் டோர்கள் இன்வெர்ட்டடாகத் திறப்பதும் புதுமையாக இருக்கிறது. 

இதில் இன்னொரு ஹைலைட்டும் இருக்கிறது. இதில் AGS (Active Grille Shutter) என்றொரு அம்சம் உண்டு. கார் ஓடும்போது கிரில்கள் தானாகத் திறந்து மூடும். இது டிராக் கோ-எஃபீஷியன்ட் ஃபோர்ஸைக் குறைத்து ஏரோ டைனமிக்கை அதிகப்படுத்தும். இதுவும் வேறெந்தக் கார்களிலும் இல்லை. 

‛சின்னக் காலா இருந்தாலும் நல்லா இருக்குடா’ என்று விவேக் சொல்வாரே… அதுபோல் முந்தைய கண்டுபிடிப்புகள் மாதிரி பெரிய இனோவேஷனெல்லாம் இல்லை; சிம்பிளாக இருந்தாலும் அவசியமானதொரு கண்டுபிடிப்பாக இது இருப்பதாலோ என்னவோ,  HiPhi Z பிரபலமாகி இருக்கிறது. 

HiPhi Z

சீனாக்காரங்க எவ்வளவோ புதுமைகளைக் கண்டுபிடிக்கிறாங்க; நாம அதை ஃபாலோவாச்சும் பண்ணுவோம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.