Rohit Sharma : இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, இப்போது மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார். மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்ஷா, ரோகித் சர்மா தான் எப்போதும் எங்களின் கேப்டன் என புகழாரம் சூட்டினார். இதனால், அவரிடம் மீண்டும் இந்திய அணியின் ஒருநாள் போட்டி கேப்டன்சியை கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், ஒருநாள் போட்டியில் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறார் ரோகித். 2027 ஆம் ஆண்டு நடக்கும் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருடன் இந்த பார்மேட்டில் இருந்து ஓய்வு பெற அவர் திட்டமிட்டுள்ளார்.
Add Zee News as a Preferred Source
ஜெய்ஷாவின் பேச்சு
இந்த நேரத்தில் ஜெய்ஷாவின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் மும்பையில் நடந்த ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ‘யுனைடெட் இன் ட்ரையம்ப்’ விழாவில், ஐசிசி தலைவர் ஜெய் ஷா, ரோஹித்தை ‘கேப்டன்’ என்று அழைத்து கௌரவித்தார். இந்த விழாவில் பேசிய ஜெய் ஷா, “நமது கேப்டன் இங்கே அமர்ந்திருக்கிறார். நான் உங்களை இப்போதும் கேப்டன் என்றுதான் அழைப்பேன். ஏனென்றால், நீங்கள் இந்தியாவிற்கு இரண்டு மிக முக்கியமான ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்துள்ளீர்கள்,” என்று புகழாரம் சூட்டினார். 2024 டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்து 11 ஆண்டுகால ஐசிசி கோப்பை தாகத்தைத் தீர்த்து, பார்படாஸில் இந்தியாவை சாம்பியனாக்கினார். 2025 சாம்பியன்ஸ் ட்ராபியையும் ரோகித் தலைமையில் இந்திய அணி கைப்பற்றியது என ஜெய்ஷா கூறினார்.
ரோகித் மிகச் சிறந்த கேப்டன்
2023 ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டியில் கோப்பையைத் தவறவிட்டது. “அன்று நாம் கோப்பையை வெல்லவில்லை என்றாலும், இந்தியர்களின் இதயங்களை வென்றோம். ஆனால் 2024-ல் நாம் இதயங்களையும் வென்றோம், கோப்பையையும் வென்றோம்” என்று ஜெய் ஷா ரோகித் சர்மாவை பாராட்டினார்.
‘ஹிட்மேன்’ அதிரடி
ரோஹித் சர்மா டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், ஒருநாள் (ODI) போட்டிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். விஜய் ஹசாரே டிராபி தொடரில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை அணிக்காகக் களமிறங்கிய ரோஹித், சிக்கிம் அணிக்கு எதிராக 155 ரன்கள் விளாசி, அமர்களப்படுத்தினார். தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடுவதை இலக்காகக் கொண்டு ரோகித் இந்த பார்மேட்டில் விளையாடி வருகிறார்.
ரசிகர்கள் வலியுறுத்தல்
இதனால், இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பை மீண்டும் ரோகித் சர்மாவிடம் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லை. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியே இந்த உலகக்கோப்பையில் களமிறங்க வாய்ப்புகள் உள்ளது. அவருக்கு ரோகித் சர்மா, விராட் கோலி பக்கபலமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா – நியூசிலாந்து ஒருநாள் தொடர்
இந்திய அணி அடுத்தாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 11 ஆம் தேதி வதோதராவில் உள்ள பிசிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய ஆண்கள் அணி முதன்முறையாக வதோதரா மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி விளையாடவுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஜனவரி 14-ம் தேதி ராஜ்கோட்டிலும், மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி ஜனவரி 18-ம் தேதி இந்தூரிலும் நடைபெறவுள்ளது. இந்த மூன்று போட்டிகளுமே பகல்-இரவு ஆட்டங்களாக நடைபெற உள்ளன. மதியம் 1:00 மணிக்கு டாஸ் போடப்பட்டு, சரியாக 1:30 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.
நேரடி ஒளிபரப்பு
இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்தத் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் பல்வேறு மொழிகளில் நேரலையில் காணலாம். இணையதளத்தில் பார்க்க விரும்புபவர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) செயலி மூலம் போட்டிகளை நேரலையாகக் கண்டு களிக்கலாம்.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More