நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கொதுமுடி படுகர் கிராமம். மலை காய்கறி, தேயிலை சாகுபடி அதிகம் நடைபெறும் இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

தொழிலாளர்களைத் தங்கவைக்க தோட்ட உரிமையாளர்களால் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கும் பழங்கால கட்டடங்களில் தங்கியபடியே அந்தந்த உரிமையாளர்களின் தோட்டங்களில் கூலி வேலை செய்து வாழ்வைக் கழித்து வருகின்றனர்.
தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் குடியிருப்புகளில் கழிவறை இல்லை என்பதால் பெண்களும், ஆண்களும் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்து சென்று வனத்தை ஒட்டியுள்ள மறைவிடத்தை திறந்தவெளிக் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் கடுமையான அவமானங்களைச் சந்தித்து வரும் இந்த மக்களுக்கு வனவிலங்குகளின் எதிர்கொள்ளல்களும் பெரும் பிரச்னையாக மாறியிருக்கின்றன.

பொதுக்கழிவறை, வீட்டுமனை பட்டா வேண்டி அந்த மக்கள் கடந்த 40 வருடங்களாகப் போராடி வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை அந்தப் பகுதிக்கு மலம் கழிக்கச் சென்ற 40 வயதுடைய மலர்க்கொடி என்கிற பெண் காட்டு மாடு தாக்கியதில் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உயிரிழந்திருக்கிறார்.
இந்தத் துயரம் குறித்து தெரிவித்த உள்ளூர் மக்கள், “கொதுமுடி ஹட்டி பகுதியில் படுகர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பாலம் பகுதியில் 40-க்கும் அதிகமான கூலித்தொழிலாளர்களின் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
சொந்தமாக வீடற்ற இந்த மக்களுக்கான பொதுக்கழிவறைகள் கூட கிடையாது. பிளாஸ்டிக் பாட்டில், கேன் போன்றவற்றில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு கூனிக்குறுகியபடியே நாள்தோறும் வனப்பகுதிக்குள் சென்று இயற்கை உபாதைகளைக் கழித்து வருவார்கள்.

பெண்கள் பெரும்பாலும் காலை விடிவதற்கு முன்பும், மாலை இருட்டிய பிறகுமே செல்வார்கள். இன்று காலை விடிவதற்குள் மலம் கழிக்கச் சென்ற பெண்ணை காட்டுமாடு முட்டியதில் அங்கேயே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கூலித்தொழிலாளரான மலர்க்கொடியின் கணவர் மூட்டைச் சுமக்கும் வேலை செய்து வருகிறார். இரண்டு ஆண் குழந்தைகளும் அரசுப் பள்ளியில் படித்து வருகிறார்கள். இனி யாருக்கும் இப்படி ஒரு துயரம் ஏற்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.