உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி என்ற இடத்தில் அனிதா செளதரி என்ற பெண் கடந்த 4ம் தேதி இரவு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ டிரைவராக கருதப்பட்ட அனிதா இரவில் ஆட்டோ ஓட்டிச்சென்று கொண்டிருந்தபோது அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். அவர் ஓட்டிச்சென்ற ஆட்டோ ரோட்டோரம் கிடந்தது. அவர் சாலையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து அனிதாவின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் சிவம் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

உடனே அவர்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இதில் முக்கிய குற்றவாளி முகேஷ் என்று தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் போலீஸார் முகேஷை தேடி வந்தனர். முகேஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அவரது கார் அங்குள்ள ஆற்றுப்பாலத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து அங்கு தேடிப்பார்த்ததில் அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடியதை தொடர்ந்து பகவான்புரா என்ற இடத்தில் முகேஷ் இருப்பது தெரிய வந்து அவரை போலீஸார் சுற்றி வளைத்தனர்.
உடனே முகேஷ் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். போலீஸாரும் திரும்ப சுட்டனர். இதில் முகேஷ் காலில் தோட்டா பாய்ந்து காயம் அடைந்தார். அவரை போலீஸார் மீட்டு மருத்துவனையில் சேர்த்துள்ளனர்.
காதலித்து திருமணம் செய்து கைவிட்ட அனிதா
இது குறித்து போலீஸ் அதிகாரி பிரீத்தி சிங் கூறுகையில்,”முகேஷிடம் விசாரித்த போது அனிதாவும், முகேஷும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் கோயிலில் திருமணமும் செய்து கொண்டுள்ளனர். ஆனால் அவர்களது உறவு நீண்ட நாள் நீடிக்கவில்லை. இதையடுத்து அனிதா முகேஷை கைவிட்டுவிட்டு சென்றுவிட்டார்.
அதோடு அனிதா வேறு ஒரு திருமணமும் செய்து கொண்டார். இதற்கு பழிவாங்கத்தான் முகேஷ் அனிதாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதுவும் முகேஷும், அனிதாவும் திருமணம் செய்த நாளில் கொலை செய்ய திட்டமிட்டு தனது நண்பர்களின் துணையோடு சுட்டுக்கொலை செய்துள்ளார். அதுவும் அனிதா ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.