தங்கம் மோசடி வழக்கில் புதிய திருப்பம்; சபரிமலை தந்திரி அதிரடி கைது

திருவனந்தபுரம்,

திருப்பதிக்கு அடுத்தபடியாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குத் தான் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகின்றனர். வருமானத்திலும் திருப்பதிக்கு அடுத்த இடத்தில் சபரிமலை கோயில் உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதும் சபரிமலை கோயிலில் இருந்து சமீபத்தில் தங்கம் திருடப்பட்டதாக வெளியான தகவல் பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கோவில் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவர்களே இந்த திருட்டில் ஈடுபட்டது அய்யப்ப பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை கேரள ஐகோர்ட்டு நேரடியாக கையில் எடுத்தது. ஐகோர்ட்டு நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியே வந்தன. சபரிமலை கோவிலில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகளை செம்புத் தகடுகள் என்று போலி ஆவணம் தயாரித்து அவற்றை சென்னைக்கு கொண்டு சென்று விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக உண்ணிகிருஷ்ணன் போத்தி மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 2 முன்னாள் தலைவர்கள், முன்னாள் உறுப்பினர், முன்னாள் உயரதிகாரிகள், சென்னை அம்பத்தூர் ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ் பண்டாரி, கர்நாடக மாநில நகை வியாபாரி கோவர்தன் என 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருந்தனர்.இதில் பத்மகுமார் என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மேலும் சிலர் விசாரணை வளையத்துக்குள் இருந்தனர்.

இதற்கிடையே தங்கம் அபகரிப்பு விவகாரத்தில் சட்ட விரோத பணபரிமாற்றம், கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் நடவடிக்கை நடந்துள்ளதாகவும் சிறப்பு விசாரணைக்குழுவினர் முதல் தகவல் அறிக்கையாக கோர்ட்டில் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் 19-ந் தேதி அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டது. எனினும் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணையை தொடர்ந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக நேற்று காலையில் சபரிமலை அய்யப்பன் கோவில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவருவை சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்தனர். ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள தேவஸ்தான முன்னாள் தலைவர் பத்மகுமார், அர்ச்சகர் உன்னி கிருஷ்ணன் போற்றிக்கு உதவியது தந்திரி கண்டரரு ராஜீவரு தான் என விசாரணையில் தெரிய வந்தது. இதனை இருவரும் அளித்த வாக்குமூலத்திலும் தெரிவித்துள்ளனர். சபரிமலையில் தங்கம் அபகரிப்பு வழக்கில் 10 பேர் சிக்கியுள்ள நிலையில் தந்திரி கைது செய்யப்பட்ட சம்பவம் அய்யப்ப பக்தர்களிடையே அதிர்ச்சி உள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.