"அனைவரும் நன்றியுடனும், அன்புடனும் இருங்கள்" – கடற்கரை பொங்கல் விழாவில் நெகிழ்ந்த நடிகை தேவயானி!

கன்னியாகுமரி ரஸ்த்தாகாடு கடற்கரையில், கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 12-வது சமத்துவ பொங்கல்விழா நடைபெற்றது. இதில் 3006 பெண்கள் ஒரே இடத்தில் பொங்கலிட்டனர். சினிமா தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நாகர்கோவில் மேயர் மகேஷ், சபாநாயகர் அப்பாவு, எம்.பி விஜய்வசந்த், நடிகை தேவயானி உட்பட பலர் கலந்துகொண்டனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகை தேவயானி, “கடற்கரையில் ஆயிரக்கணக்கான பெண்கள்கூடி ஒற்றுமையாக பொங்கலிடும் இந்த காட்சி மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோன்ற காட்சியை நான் இதற்கு முன் கண்டதில்லை. அதற்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி. கடவுளின் அருள் இருந்தால்தான் இதுபோன்று நடக்கும். பொங்கல் என்பது தமிழர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பொங்கல் ஒரு அருமையான விழா. பொங்கலன்று சூரியனை வணங்குகிறோம். இயற்கைக்கு நன்றி சொல்கிறோம். கூட இருக்கும் பிராணிகளுக்கு நன்றிசொல்லி வணங்குகிறோம். அனைவரும் நன்றியுடனும், அன்புடனும் இருங்கள். நான்கு நாட்கள் விடுமுறையில் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருங்கள்” என்றார். மேலும், ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப ‘மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு…’ என்ற பாடலையும் தேவயானி மேடையில் பாடினார்.

பொங்கல் விழாவில் நடிகை தேவயானி

இதில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், “தமிழர்களுடைய பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர், சாமானிய மக்களும் மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாட வேண்டும் என்பதற்காக ரொக்கப் பணமாக 3000 ரூபாய் கொடுத்துள்ளார். சாமானிய வீட்டு ஏழை பெண்கள் இலவச மகளிர் பேருந்து எப்போது வரும் என்று கேட்கிறார்கள். நாள் ஒன்றுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நகரப் பேருந்தில் கட்டணம் இல்லாமல் செல்லலாம் என்று உத்தரவு பிறப்பித்து  ஆண்டுக்கு 3760 கோடி ரூபாயை முதலமைச்சர் அள்ளிக் கொடுத்துள்ளார். ஒரு கோடியே 32 லட்சம் பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றார்.

கடற்கரையில் நடைபெற்ற பொங்கல் விழா

பட்டப்படிப்பு படிக்க மாதம் 1000 ரூபாய் கொடுக்கின்ற நம்முடைய முதல்வர் சாமானிய ஏழை மக்களை பற்றி சிந்தித்து செயல்பட்டதனுடைய விளைவு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெண்கள் 60  சதவிகிதம் பேர் பட்டம் படித்திருக்கின்றார்கள். திராவிட சமத்துவ மாடல் தான் இவ்வளவு பெரிய வெற்றியை நமக்கு தந்திருக்கின்றது. நம் முதல்வர் சாமானிய மக்களை பற்றி சிந்திக்கின்றார். ஏழைகளைப் பற்றி சிந்திக்கின்றார். ஒரே கையெழுத்தில் 6800 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்தவர் முதல்வர். ஒரு நாட்டினுடைய முதுகெலும்பு விவசாயிகள்தான். விவசாயி சேற்றில் காலை வைக்கவில்லை என்றால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.