"காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம்; அதைத் திமுகதான் எதிர்த்ததாம்!" – திருச்சி வேலுசாமி காட்டம்!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுசாமி ‘பராசக்தி’ திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் விஷயங்கள் குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார்.

அப்படத்தில் காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம், அதைத் திமுகதான் எதிர்த்ததாம் எனக் கூறியவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இந்தியில் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்கள் எனவும், அப்போது இந்தி ஆட்சி மொழியாக வராமல் இருந்ததற்குக் காரணம் சஞ்சீவி ரெட்டிதான் எனவும் செய்தியாளர்களிடையே அவர் பேசியிருக்கிறார்.

பராசக்தி
பராசக்தி

திருச்சி வேலுசாமி பேசுகையில், “இன்று ஒரு திரைப்படம் வந்திருக்கிறது. அப்படத்தைத் தயாரித்தது தமிழகத்தின் ஆளுங்கட்சி.

அதில் வசனங்கள் பற்றி என்னிடம் சொன்னார்கள். காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம். அதைத் திமுகதான் எதிர்த்ததாம். எனக்கு இந்தி தெரியாது. இங்கிருக்கும் பலருக்கும் இந்தி தெரிய வாய்ப்பில்லை.

அக்குடும்பத்தைச் சேர்ந்த, பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கக்கூடியவர் இந்தியிலேயே படித்து, பட்டம் பெற்றிருக்கிறாரா, இல்லையா?

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் மத்தியில் அமைச்சராக இருந்தபோது, அப்போது எப்படி இவர் இந்த இளம் வயதிலேயே மிகச் சிறப்பாகப் பணியாற்றுகிறார் என அப்போதைய முதல்வரிடம் கேட்டபோது ‘அவனுக்கு ஆங்கிலத்தைவிட இந்தி நன்றாகத் தெரியும்.

அதனால் அவனுக்கு அங்கு மரியாதை இருக்கிறது’ எனச் சொன்னாரா இல்லையா? இந்தி இங்கு ஆட்சிமொழியாக வராமல் தடுத்ததற்கு ஒரே காரணம் சஞ்சீவி ரெட்டிதான்.

திருச்சி வேலுசாமி
திருச்சி வேலுசாமி

அப்போது ஆட்சிமொழி எதுவாக இருக்க வேண்டும் என வாக்கெடுப்பு நடக்கும்போது, இந்திக்குத்தான் சமமான வாக்குகள் வருகின்றன.

அப்போது சஞ்சீவி ரெட்டி இந்தி மொழிக்கு எதிராக வாக்குப் போட்டதால்தான் அப்போது அது தடுக்கப்பட்டது. 1967 வரை தமிழகப் பள்ளிகளில் தமிழ்தான் பாடமொழியாக இருந்தது.

அதற்குப் பின் வந்த ஆங்கிலத்திற்கு காங்கிரஸ் காரணமா அல்லது திராவிட இயக்கம் காரணமா? அப்போது தமிழ் மொழிக்காகப் பல சாதனைகளைச் செய்வதற்கு காமராஜர் காரணமாக இருந்தார்.

1972-ல் காமராஜர் திருச்சிக்கு வந்தார். அப்போது அவர் அங்கிருந்து கரூர் செல்ல வேண்டும். அப்போது அவர் இடையிடையே நிறுத்திச் சிறுநீர் கழிக்க வேண்டும். அதைத் தடுத்த வக்கிரப் புத்தியை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன். அப்போது அவர் அதைப் பற்றிக் கவலைப்படவே இல்லை.” எனக் கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.