திரைப்படங்களில் தணிக்கைத் துறையின் அரசியல் தலையீடுகள் குறித்தான விவாதம்தான் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
பொங்கலுக்கு வெளியாவதாகத் திட்டமிட்டிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததனால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

‘பராசக்தி’ திரைப்படத்திலும் முக்கியமான அரசியல் காட்சிகளையும், வசனங்களையும் தணிக்கைத் துறையினர் கட் செய்திருப்பதற்கும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், 49வது சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்த இயக்குநர் பா. ரஞ்சித் தணிக்கைத் துறையின் செயல்பாடுகள் குறித்தும், அதில் அவருடைய திரைப்படங்கள் சந்தித்த சிக்கல்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.
பா. ரஞ்சித் பேசும்போது, “திரைப்படங்கள் வணிகம் சம்பந்தப்பட்டது. இன்னைக்கு அதுல அரசியல் தலையீடுகளும் இருக்கு.
இன்னைக்கு சொல்ல விரும்புற விஷயத்தைச் சொல்ல வாய்ப்புகளை நிறைய உருவாக்கிட்டிருக்கோம்.
‘நீலம்’ போல நிறைய வாய்ப்புகள் அளிக்கக்கூடிய நிறைய பதிப்பகங்கள் இருக்கு. ஒரு கலைஞன், தான் சொல்ல விரும்புற விஷயத்தைச் சொல்வதற்கான ஒரு களத்தை உருவாக்குறதுதான் ரொம்ப முக்கியமானது.

எழுத்துத் துறையில இது ஆரோக்கியமாகத்தான் இருக்குனு நினைக்கிறேன். ஆனா, சாகித்ய அகாடமி விருதுகளிலும் இப்போ சில சிக்கல்கள் ஆரம்பிச்சிருக்காங்க.” என்றவர், “தமிழ் சினிமாவுல ஆரோக்கியமான போக்குதான் இருப்பதாகப் பார்க்கிறேன்.
சமீபத்துல ‘சிறை’ திரைப்படம் மக்களால கொண்டாடப்பட்டு வெகுஜன அரசியலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுச்சு.
தமிழ்ச் சூழல்ல இது மாதிரியான சினிமாக்களை எப்போதும் ஆதரிச்சிருக்காங்க. இன்னைக்கு இளைஞர்களும் சமூகக் கருத்துகளைச் சொல்ல வேண்டும்னு முனைப்போடு இயங்குறாங்க.
ரொம்பவே நேர்மறையான விஷயங்கள் ஏற்பட்டிருக்கு. அதுனாலதான் சில சிக்கல்களும் ஏற்பட்டிருக்குனு நான் நினைக்கிறேன். சமீபத்துல, ‘ஜனநாயகன்’, ‘பராசக்தி’ படங்கள்ல தணிக்கைத் துறையின் தலையீடு அதிகமாகி இருக்கிறதைப் பார்க்கிறோம்.

‘பராசக்தி’ மாதிரி என்னுடைய இயக்கத்துல, தயாரிப்புல வந்த படங்கள் நிறைய பிரச்னைகளைச் சமாளிச்சிருக்கு.
என் படங்கள்ல நிறைய சீக்குவென்ஸ்களை குதறிவிட்டிருக்காங்க. அதை மீறித்தான் என்னுடைய படங்கள் மக்களை வந்து சேர்ந்திருக்கு.
இன்னைக்கு ‘பராசக்தி’ படம் மூலமாக இது மாதிரி நிறைய சிக்கல்கள் இருக்குனு மக்களுக்கு தெரிய வந்திருக்கு.
இதன் பிறகு இந்தப் பிரச்னைக்கு தீவிரமாகப் படைப்பாளிகள் குரல் கொடுக்கணும்னு என்னுடைய விருப்பம்.” எனக் கூறியிருக்கிறார்.