இன்றைய கார்ப்பரேட் உலகில் மிக உயர்ந்த சம்பளம், பதவி உயர்வு என இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நியூயார்க்கைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், தனது தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக ரூ. 2.7 கோடி (3,00,000 டாலர்) சம்பள வேலையை ராஜினாமா செய்திருக்கிறார்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற வார்டன் பள்ளியில் சந்தைப்படுத்தல் மற்றும் செயல்பாட்டு மேலாண்மையில் பட்டம் பெற்ற டேனியல் மின் என்ற இளைஞர் தனது 21-வது வயதிலேயே ‘க்ளூலி’ (cluely) என்ற செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாக (CMO) பணியில் சேர்ந்தார்.

மிக இளம் வயதிலேயே இவ்வளவு பெரிய பொறுப்பும், கோடிக்கணக்கில் சம்பளமும் கிடைத்ததால் ஆரம்பத்தில் உற்சாகமாகப் பணியாற்றியிருக்கிறார். 21 வயதில் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் உழைப்பதுதான் சாதனை எனவும் நம்பியுள்ளார். ஆனால், சில மாதங்களிலேயே இடைவிடாத வேலைப் பளுவும், அந்தப் பதவியின் அழுத்தமும் அவரைப் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது.
இது தொடர்பாக டேனியல் மின் தன் சமூக ஊடகப் பதிவில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “நண்பர்களுடன் ஒரு வேளை இரவு உணவு உண்பது, என் தம்பியின் 12-வது பிறந்தநாளுக்கு அவனுக்கு சர்ப்பிரைஸ் கொடுப்பது போன்ற மிகச் சிறிய மகிழ்ச்சியைக் கூட நான் இழக்கத் தொடங்கினேன். நிறுவனத்தின் வளர்ச்சியில் நான் காட்ட வேண்டிய தீவிரம், எனது தனிப்பட்ட வாழ்க்கையை மொத்தமாக அழித்துவிட்டது.
வேலையில் ஏற்பட்ட சலிப்பும், அதிருப்தியும் ஒருகட்டத்தில் வெளிப்படத் தொடங்கியது. இதைக் கவனித்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராய் லீ என்னிடம் பேசியபோது நான் உணர்ச்சிவசப்பட்டு உடைந்து அழுதேன். அப்போதுதான் நான் வேலையை விட்டு விலகப்போவதைத் தைரியமாக அவரிடம் சொன்னேன்.

ராய் லீ எனது தனிப்பட்ட நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்றாலும், “நான் ஏற விரும்பிய ஏணி இதுவல்ல” என்ற உண்மையை உணர்ந்தபோது ஏற்பட்ட வலியே எனது ராஜினாமாவுக்குக் காரணம். மேலும், அவ்வளவு பெரிய வருமானத்தை இழந்ததால் நிதி ரீதியான சவால்கள் வரும் என்று தெரிந்துதான் இந்த முடிவை எடுத்தேன். “நிதிச் சிக்கல்களைக் காட்டிலும், இந்தப் பதவியில் நீடிப்பது என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மிகப் பெரிய இழப்பாக அமையும்.” என அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
அவரது வீடியோவை பகிர்ந்த பலரும், நிச்சயமாக வாழ்க்கை என்பது வேலைமட்டுமல்ல… அதையும் தாண்டிய அனுபவம் எனப் பகிர்ந்து வருகின்றனர்.