முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் வாட காங்கிரஸ் கட்சியே காரணம்; ஒவைசி குற்றச்சாட்டு

மும்பை,

மராட்டியத்தில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஜல்னா மாநகராட்சி தேர்தலையொட்டி அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி எம்.பி. பங்கேற்று பேசியதாவது:-

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு சீனா ஆயுதங்களை வழங்கி உதவியது. பாகிஸ்தானின் 80 சதவீத ராணுவ தளவாடங்கள் சீனாவில் இருந்து பெறப்பட்டவையாகும். இருப்பினும் இந்திய அரசு சீன நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறது. மேலும், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்திய முஸ்லிம்களை மட்டும் “வங்கதேசத்தவர்கள்’ என்று முத்திரை குத்துவது எதற்காக?.

உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் போன்ற மாணவர் அமைப்பினர் நீண்டகாலமாக சிறையில் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம். காங்கிரஸ் கொண்டு வந்த சட்டத்திருத்தங்களே(உபா சட்டம்) அவர்களுக்கு பிணை கிடைக்காமல் தடுக்கிறது. பல முஸ்லிம் இளைஞர்கள் விசாரணையின்றி பல ஆண்டுகளாக சிறையில் வாடுவது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. மதச்சார்பற்ற கட்சிகள் என்று தங்களை சொல்லிக்கொள்பவை பா.ஜனதாவுடன் கைகோர்த்து தங்களின் உண்மையான முகத்தை காட்டிவிட்டது. தலித்துகள் மற்றும் முஸ்லிம்களின் பின்தங்கிய நிலைக்கு இக்கட்சிகளே காரணம். இவ்வாறு அவர் பேசினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.