ஜூனியர் விகடனில் இயக்குநர் இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ தொடர், இப்போது முழு நாவலாக வெளிவந்திருக்கிறது.
இந்தப் புத்தக வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.

எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன், நடிகர் சூரி, சசிகுமார், நக்கீரன் கோபால், ஆனந்த விகடன் ஆசிரியர் தி.முருகன், ஜூனியர் விகடன் ஆசிரியர் டி.கலைச்செல்வன், கவிஞர் வெய்யில் ஆகியோர் இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு மேடையில் உரையாற்றினர்.
சசிகுமார் பேசுகையில், “இயக்குநர் இரா.சரவணனை நான் முதன்முதலில் ஆனந்த விகடன் அலுவலகத்தின் வாசலில்தான் சந்திச்சேன்.
‘சுப்ரமணியபுரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக நான் அனைவருக்கும் பத்திரிகை கொடுத்துட்டு வந்தேன்.
அப்போ என்னுடைய பி.ஆர்.ஓ, சரவணனைக் காண்பித்து, ‘இவர்கிட்ட மட்டும் பேச்சு வச்சிக்காதீங்க.
அமீர் அண்ணனோட ‘பருத்திவீரன்’ திரைப்பட பிரச்னைக்கு ஜூனியர் விகடன்ல இவர் எழுதின கட்டுரைதான் காரணம்’னு சொன்னாரு.

பிறகு 2010-லதான் சரவணனைச் சந்தித்தேன். என்கிட்ட ‘தொடர்ந்து ஏன் சரவணனுக்கு படம் கொடுக்குறீங்க’னு கேட்பாங்க.
அசோக் இறப்பதற்கு முன்னாடி, ‘என் மாப்ளைக்கும் எதுவும் தெரியாது. அவனைப் பார்த்துக்கோங்க’னு 5, 6 பேர்கிட்ட சொல்லியிருக்கார்.
என்கூட என்னைப் பார்த்துட்டு நிக்குறது சரவணன்தான். அவருக்காக நான் உயிரையே கொடுக்கணும். படம் கொடுக்கிறதுல என்ன இருக்கு. அது வெற்றியடைந்தால் என்ன, தோல்வியடைந்தால் என்ன!?
‘நந்தன்’ திரைப்படத்துல நான் ஒரு சிறிய கேரக்டர்தான் நடிக்கப் போனேன். அப்போ, அதில் நடிக்கவிருந்த நடிகருக்கும் சரவணனுக்கும் மனஸ்தாபம் வந்துடுச்சு.
அவர்தான் தயாரிப்பாளர்ங்கிறதுனால நிறைய முதலீடு செய்திருந்தாரு. அப்போகூட நான்தான் இந்தக் கதையில ஹீரோவாக நடிக்கட்டுமா’னு கேட்டேன்.
அந்தப் படம் எனக்கு நல்ல பெயரைத்தான் வாங்கிக் கொடுத்தது. நண்பன், எப்போதுமே நல்ல விஷயங்களைத்தான் நமக்கு செய்வான்!
எப்போதுமே சமூகக் கருத்துகள் பேசும் படங்களைத்தான் சரவணன் எடுப்பாரு. கமர்ஷியல் படங்கள் எடுக்கச் சொல்வேன். ஆனா, அவர் அடுத்ததாகவும் ஒரு சமூகப் பிரச்னையைப் பேசும் படத்தைதான் எடுத்திருக்கார். இந்த ‘சங்காரம்’ கதையைப் படிச்சேன்.

இது பக்கா கமர்ஷியலாக இருக்கு. இதை படமாக பண்ணுவோம். நானே ஹீரோவாக நடிக்கிறேன்னு சொன்னேன்.
இல்ல, இதை சூரி அண்ணனை நினைச்சு எழுதினேன். அதான் அந்தக் கதாபாத்திரத்துக்கு சூரினு பெயர் வச்சிருக்கேன்னு சொன்னேன். சரி இன்னொரு கதாபாத்திரம் இருக்குல. அதுல நான் நடிக்கிறேன்னு சொன்னேன்.
பிறகு இந்தக் கதையை உன்னி முகுந்தன் கேட்டார். அவருக்கு மார்டின் கதாபாத்திரம் ரொம்ப பிடிச்சுப் போச்சு. இந்த ‘சங்காரம்’ நாவல் திரைக்கதை வடிவத்தைப் போலதான் இருக்கும். இதை நான் திரைக்கதை புத்தகமாகத்தான் பார்க்கிறேன்.” என்றார்.