சச்சினின் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னும் எத்தனை ரன்கள் தேவை?

Virat Kohli : இந்திய அணியின் ரன்மெஷினாக இருக்கும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை வரிசையாக முறியடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் சச்சினின் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் முறியடிக்கும் வாய்ப்பு விராட் கோலிக்கே இருக்கிறது. ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடும் விராட் கோலி சூப்பர் ஃபார்மில் இருக்கிறார். தென்னாப்பிரிக்கா அணியைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் ரன்வேட்டை செய்து கொண்டிருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 93 ரன்கள் குவித்ததன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் மிக விரைவாக 28,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இதன் மூலம் கிரிக்கெட் உலகின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்துவிட்டார்.

Add Zee News as a Preferred Source

அதிக ரன்கள் எடுத்த பிளேயர்கள் பட்டியலில் இரண்டாம் இடம்

வடோதராவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கோலி எடுத்த 93 ரன்கள், அவரைப் புதிய மைல்கல்லுக்கு அழைத்துச் சென்றது. இந்த இன்னிங்ஸிற்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 28,016 ரன்கள் எடுத்திருந்த இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காராவை பின்னுக்குத் தள்ளி கோலி இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார். அவருக்கு முன்னால் இப்போது சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இருக்கிறார். அத்துடன், நியூசிலாந்துக்கு எதிராக 1,750 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சச்சினின் சாதனையையும் கோலி சமன் செய்துள்ளார்.

சச்சினின் சாதனையை முறியடிக்க இன்னும் எத்தனை ரன்கள் தேவை?

இப்போது எல்லோருக்கும் இருக்கும் ஒரே கேள்வி, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பிளேயராக இருக்கும் சச்சினின் இந்த சாதனையையும் விராட் கோலியால் முறியடிக்க முடியுமா என்பதுதான். சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் மொத்தம் 34,357 ரன்களைக் குவித்துள்ளார். தற்போது விராட் கோலி 28,068 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார்.

கணக்கீட்டின்படி பார்த்தால், சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடித்து முதலிடத்தைப் பிடிக்க விராட் கோலிக்கு இன்னும் 6,289 ரன்கள் தேவை. ஆனால், இந்த ரன்களை எடுக்க விராட் கோலிக்கு வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து அவர் ஏற்கனவே ஓய்வு  பெற்றுவிட்டார். ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விராட் கோலி விளையாடிக்கொண்டிருக்கிறார். இன்னும் இரண்டு ஆண்டுகள் அதிகபட்சம் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் விளையாட முடியும். இந்த இரண்டு ஆண்டுகளிலும், இந்திய அணி சொற்ப அளவிலான ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதால், விராட் கோலியால் 6000 ரன்கள் எடுப்பது சாத்தியமற்றது.

விராட் கோலியின் தனித்துவம்

சச்சின் 782 இன்னிங்ஸ்களில் இந்த ரன்களைச் சேர்த்த நிலையில், கோலி வெறும் 624 இன்னிங்ஸ்களிலேயே 28,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை விளாசியுள்ளார். கோலி தற்போது 84 சர்வதேச சதங்களுடன் அவரைத் துரத்திக்கொண்டிருக்கிறார். இந்த சாதனையையும் முறியடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும், இப்போதைய சூழலில், இந்த சாதனைகளுக்கு மிக அருகில் செல்லக்கூடிய வாய்ப்புள்ள ஒரே பேட்ஸ்மேனாக விராட் கோலி ஒருவரே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author


Karthikeyan Sekar

Karthikeyan Sekar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.