`மறப்பேன்… மன்னிக்க மாட்டேன்!' – விவாகரத்து குறித்து மேரிகோம் முன்னாள் கணவர் பதில்!

பிரபல மல்யுத்த வீராங்கனையான மேரிகோம் இரண்டு நாள்களுக்கு முன்பு தனது கணவர் ஒன்லரை விவாகரத்து செய்துவிட்டதாக, குறிப்பிட்டு இருந்தார். அதோடு தனது உழைப்பில் வாங்கிய நிலத்தை அடமானம் வைத்து பல கோடி ரூபாய் பணத்தை வாங்கி மோசடி செய்துவிட்டதாகவும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மேரிகோம் கூறி இருந்தார். இக்குற்றச்சாட்டுகளுக்கு மேரிகோம் கணவரான ஒன்லர் என்று அழைக்கப்படும் கருங் ஓன்கோலர் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக ஒன்லர் அளித்த பதிலில்,”எனக்கும், மேரி கோமிற்கும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

2013ம் ஆண்டு அவருக்கு ஜூனியர் பாக்ஸர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் குடும்பத்தினர் மூலம் சமரசம் ஏற்பட்டது. 2017ம் ஆண்டு ‘மேரி கோம் பாக்ஸிங் அகாடமி’யோடு தொடர்புடைய ஒருவருடன் மீண்டும் மேரி கோமிற்கு தொடர்பு ஏற்பட்டது.

அவர்களுக்குள் தொடர்பு இருக்கிறது என்பதற்கு என்னிடம் வாட்ஸ்அப் ஆதாரம் இருக்கிறது. அவர் யாருடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

அப்படி இருந்தும் நான் அமைதியாக இருந்தேன். மேரி கோம் என்னை விட்டு விலகிச்செல்வதில் எனக்கு எந்த வித ஆப்சேபனையும் இல்லை. ஆனால் இந்த பிரிவினைக்கு நான்தான் முழுக்கக் காரணம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் தனியாக இருக்க விரும்புகிறார். நாங்கள் விவாகரத்து பெற்றுவிட்டோம். அவருக்கு இன்னொரு கணவர் வேண்டும் என்றால் எனக்கு கவலையில்லை. ஆனால் என்னைக் குறை சொல்லக் கூடாது. அவர் என்னைக் குறை கூறினால், ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள். ஆவணங்களைக் கொண்டு வாருங்கள்.

அவர் எங்கு வாழ்கிறார், யாருடன் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். எனது தற்போதைய வாழ்க்கைச் சூழலில் என்னிடம் பெரும் தொகை உள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முரணானது ஆகும். அவர் சொத்தைக் குறிப்பிட்டு என் பெயரை அதிலிருந்து அழிக்கச் சொன்னார். நான் ரூ.5 கோடியை திருடிவிட்டேன் என்று சொல்கிறார். என் வங்கிக் கணக்கைப் பாருங்கள். அதில் என்ன இருக்கிறது என்று தெரியும். திருமணமாகி 18 வருடங்கள், நாங்கள் ஒன்றாக இருந்தோம். நான் அவருடன் 18 வருடங்கள் வாழ்ந்தேன். எனக்கு என்ன இருக்கிறது? என் வீட்டைப் பாருங்கள்.

நான் டெல்லியில் ஒரு வாடகை வீட்டில் இருக்கிறேன். அவர் ஒரு பிரபலம். அவர் என்ன சொன்னாலும் சிலர் கேட்பார்கள், சிலர் கேட்க மாட்டார்கள். நான் எனது திருமண மோதிரத்தைக் கழற்றிவிட்டேன். கடன் வாங்கி சொத்தை அபகரித்தேன் என்று சொல்கிறார். சொத்து என் பெயரில் இருந்தால், அவரிடம் ஆவணங்கள் இருக்கும், இல்லையா? அந்த ஆவணங்களை அவர் கொண்டு வரட்டும், பிறகு பேசுவோம். நாங்கள் வழக்கமாக விவாகரத்து பெற்றுள்ளோம்.

இன்னும் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. நான் என் குழந்தைகளை நேசிப்பதால் நீதிமன்றத்தில் போராட விரும்பவில்லை, என் கணவர் பணம் திருடுகிறார் என்று தேசிய ஊடகங்களில் பேசி என்ன பயன்? அவரது விளையாட்டு வாழ்க்கையிலும், தனிப்பட்ட முறையிலும் நான் அவருக்கு பல விதங்களில் உதவி செய்து இருக்கிறேன். ஆனால் அவர் என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவரை மறப்பேன்.

ஆனால் அவர் எனக்கு செய்ததை மன்னிக்க மாட்டேன். என்னை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிட்டார். நான் மது அருந்துகிறேன் என்று சொல்கிறார். ஆனால் அவர் வோட்கா, ரம் குடிப்பார், குட்கா சாப்பிடுவார். ஆனால் அதை வெளியில் சொன்னது கிடையாது. 2022ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் காயம் அடைந்தார். அப்படி இருந்தும் மும்பை சென்று அவர் தொடர்பு வைத்திருக்கும் நபரைச் சந்தித்துவிட்டு வந்தார். அதற்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.