Asian Games 2026 cricket schedule : ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கிரிக்கெட் அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. கடந்த முறை சீனாவில் நடைபெற்ற போட்டிகளில் இந்திய ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்த நிலையில், இந்த முறையும் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற ஆவலில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Add Zee News as a Preferred Source
ஜப்பானில் கிரிக்கெட்: எப்போது தொடக்கம்?
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெற உள்ளன. ஆனால், கிரிக்கெட் போட்டிகள் தொடக்க விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, அதாவது செப்டம்பர் 17 அன்றே தொடங்குகின்றன. ஜப்பானின் ஐச்சி மாகாணத்தில் உள்ள கோரோகி அத்லெட்டிக் பூங்காவில் (Korogi Athletic Park) அனைத்துப் போட்டிகளும் டி20 பார்மேட்டில் நடைபெறவுள்ளன.
பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 22-ம் தேதி இறுதிப் போட்டியுடன் நிறைவடையும். இதில் மொத்தம் 8 அணிகள் நாக்அவுட் முறையில் மோதுகின்றன. இதற்கடுத்து, ஆண்கள் அணிக்கான கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 24-ல் தொடங்கி அக்டோபர் 3-ம் தேதி வரை நடைபெறும். இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன.
போட்டி நேரம்
ஜப்பானில் போட்டிகள் நடைபெறுவதால், இந்திய நேரப்படி காலையிலேயே போட்டிகள் நடக்க இருக்கின்றன. தினமும் இரண்டு போட்டிகள் வீதம் நடைபெறவுள்ளன. முதல் போட்டி இந்திய நேரப்படி காலை 5:30 மணிக்கும், இரண்டாவது போட்டி காலை 10:30 மணிக்கும் தொடங்கும். இதனால் இந்திய ரசிகர்கள் அதிகாலையிலேயே கிரிக்கெட் போட்டிகளை பார்க்க வேண்டியிருக்கும்.
ரோகித் சர்மா – விராட் கோலி ஆடுவார்களா?
ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வி இதுதான். 2026-ம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதே ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற இருக்கிறது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஏற்கனவே சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அவர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை. கடந்த முறையைப் போலவே, ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய பலமான அணியே ஜப்பானுக்கு அனுப்பப்பட அதிக வாய்ப்புள்ளது.
தங்கத்தை தற்காத்துக் கொள்ளுமா இந்தியா?
2023-ல் சீனாவில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில், இந்திய மகளிர் அணி இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றது. அதேபோல் ஆண்கள் பிரிவில் மழை காரணமாக ஆட்டம் ரத்தானாலும், தரவரிசை அடிப்படையில் இந்திய அணிக்கு தங்கம் வழங்கப்பட்டது. இந்த முறை ஜப்பான் மண்ணில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற அணிகளிடமிருந்து இந்தியாவுக்கு கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More