ஐபிஎல் 2026 சீசன் கடந்த டிசம்பர் மாதம் நடந்து முடிந்தது. ஆனால் ஏலம் நடப்பதற்கு முன்பே கிரிக்கெட் ரசிகர்களை அதிரவைத்த ஒரு சம்பவம் நடந்தது. அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டிரேடு செய்யப்பட்டது தான். சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் சென்னை அணியில் இருந்து ராஜஸ்தான் அணிக்கு மாற்றப்பட்டார். இந்த டிரேட் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பிய நிலையில், இது முழுக்க முழுக்க கிரிக்கெட் காரணங்களுக்காக மட்டும் நடக்கவில்லை என்று இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.
Add Zee News as a Preferred Source

CSKவுக்கு ஓப்பனர் தேவையில்லை?
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஹனுமா விஹாரி, சென்னை அணியின் இந்த முடிவுக்கு பின்னால் இருக்கும் வியாபார உத்தியை பத்தி தெரிவித்துள்ளார். “உண்மையை சொல்லப்போனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் தேவையே இல்லை. ஏனெனில், அடுத்த சீசனுக்கு தேவையான தொடக்க ஆட்டக்காரர்கள் ஏற்கனவே அந்த அணியில் இருக்கிறார்கள். ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மத்ரே மற்றும் உர்வில் படேல் போன்ற திறமையான ஓப்பனர்கள் அணியில் இருக்கும்போது, சஞ்சு சாம்சனை ஒரு ஓப்பனராக கருதி அவர்கள் வாங்கியிருக்க வாய்ப்பில்லை,” என்று விஹாரி குறிப்பிட்டுள்ளார்.
ஏன் வாங்கினார்கள்?
சென்னை அணியின் இந்த முடிவுக்கு மிக முக்கிய காரணம் சஞ்சு சாம்சனின் மார்க்கெட் வேல்யூ மற்றும் ரசிகர் பட்டாளம் தான் என்று விஹாரி தெரிவித்துள்ளார். “ஐபிஎல் என்பது வெறும் கிரிக்கெட் மட்டும் கிடையாது. ஐபிஎல் உரிமையாளர்கள் கிரிக்கெட்டையும் தாண்டி சிந்திப்பார்கள். ஒரு வீரரால் அணிக்கு எவ்வளவு வணிக ரீதியான மதிப்பு கிடைக்கும் என்பதில் அவர்கள் குறியாக இருப்பார்கள். சஞ்சு சாம்சனுக்கு தென்னிந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கேரளா ரசிகர்கள் அவர் எங்கு விளையாடினாலும் திரண்டு வந்து ஆதரவு அளிப்பார்கள். இந்த ரசிகர் செல்வாக்கை பயன்படுத்திக்கொள்ளவே சென்னை அணி அவரை வாங்கியுள்ளது,” என்று விஹாரி தெரிவித்துள்ளார்.

தோனிக்கு அடுத்து!
மகேந்திர சிங் தோனிக்கு பிறகு, சென்னை அணியை தாங்கிப் பிடிக்கக்கூடிய, பான்-இந்தியா அளவில் புகழ்பெற்ற ஒரு முகம் சென்னை அணிக்கு தேவைப்படுகிறது. கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன், தென்னிந்திய ரசிகர்களின் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றவர் என்பதால், தோனியின் இடத்தை பூர்த்தி செய்யவும், சென்னை அணியின் பிராண்ட் மதிப்பை தக்கவைக்கவும் அவர் சரியான தேர்வாக இருப்பார் என்று நிர்வாகம் கருதியிருக்கலாம் எனவும் விஹாரி தெரிவித்துள்ளார்.
சென்னை அணியில் சஞ்சுவின் இடம் என்ன?
சிஎஸ்கேவில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஏற்கனவே இருப்பதால், சஞ்சு சாம்சன் சென்னை அணியில் மூன்றாவது இடத்தில் களமிறங்க வாய்ப்புள்ளது என்றும் விஹாரி கணித்துள்ளார். கடந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக அவர் மூன்றாவது இடத்தில்தான் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சு சாம்சனின் வருகை சென்னை அணியின் பேட்டிங் வரிசையை விட, அதன் பிராண்ட் வேல்யூவை எகிற வைக்கும் என்று விஹாரி தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.