I-PAC: “மம்தா தலையீடா? அமலாக்கத்துறை அவசரமா?" – உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம்!

அரசியல் ஆலோசனை & தேர்தல் யுக்திகளை வகுக்கும் ‘ஐ-பேக்’ I-PAC நிறுவனத்தின் இயக்குநர் பிரதிக் ஜெயின். இவர் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவராகவும் இருக்கிறார். இந்த நிறுவனம் தான் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கிறது. இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி I-PAC நிறுவனத்தின் கொல்கத்தா அலுவலகம் மற்றும் அதன் இணை நிறுவனர் பிரதிக் ஜெயினின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

ஆவணங்களைக் கைப்பற்றிய மம்தா
ஆவணங்களைக் கைப்பற்றிய மம்தா

இந்த சோதனையின் மம்தா பானர்ஜி பிரதிக் ஜெயினின் வீட்டுக்குச் சென்று சில ஆவணங்களை கைப்பற்றியிருக்கிறார் என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மம்தா பானர்ஜி, ‘‘அமலாக்கத் துறையினரின் இந்த சோதனை நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது. அவர்கள் எங்கள் கட்சியின் ஆவணங்களையும் சட்டமன்றத் தேர்தலுக்கான எங்கள் வேட்பாளர்களைப் பற்றிய விவரங்களையும் கொண்ட ஹார்ட் டிஸ்குகளை பறிமுதல் செய்து கொண்டிருந்தனர்.

நான் அவற்றை அவர்களிடம் இருந்து மீட்டுக் கொண்டு வந்தேன். அரசியல் கட்சியின் தரவுகளைச் சேகரிப்பது அமலாக்கத்துறையின் கடமையா? இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. உள்துறை அமைச்சர் நாட்டை பாதுகாப்பவரைப் போல அல்லாமல், மிகவும் மோசமான அமைச்சரைப் போல நடந்து கொள்கிறார்’’ என கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து விசாரணை மற்றும் சோதனையின்போது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட மேற்கு வங்க அரசின் தலையீடு மற்றும் இடையூறு தொடர்பாக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “கடந்த காலங்களிலும், சட்டப்பூர்வ அமைப்புகள் தங்கள் சட்டப்பூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தியபோதெல்லாம், மம்தா பானர்ஜி தலையிட்டு இடையூறு விளைவித்தார்.

உச்ச நீதிமன்றம்

இது போன்ற செயல்களால் மாநில அரசுகள் ‘சோதனையின்போது அத்துமீறி நுழையலாம், திருடலாம், பின்னர் தர்ணாவில் அமரலாம்’ என்று நினைப்பார்கள், மத்திய படைகள் மனச்சோர்வடைவார்கள். இந்த நிகழ்வுகள் ஒரு கவலைக்குரிய போக்கைக் காட்டுகிறது. ஒரு சட்டப்பூர்வ அமைப்பு தனது சட்டப்பூர்வ கடமைகளைச் செய்யும்போது, தலையிட்டு, காவல்துறை ஆணையருடன் சம்பவ இடத்திற்கு வந்து, தர்ணா போராட்டத்தில்கூட ஈடுபடுகிறார்கள். இந்த நிகழ்வுகள் நடந்தபோதிலும், I-PAC ஒரு புகார் கூட பதிவு செய்யவில்லை. எனவே இந்த விஷயத்தைப் பரிசீலிக்க வேண்டும்” என அமலாக்கத்துறை நீதிமன்றத்தை வலியுறுத்தியது.

இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “இந்த வழக்கை முதலில் உயர் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். அதன் பிறகு சம்பந்தப்பட்ட தரப்பினர் மேல்முறையீடு செய்ய உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். அரசியலமைப்புச் சட்டத்தின் 226-வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருந்தபோதிலும், நேரடியாக உச்ச நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறார்கள்.

அமலாக்கத்துறை விசாரணை
அமலாக்கத்துறை விசாரணை

இதையே அவர்கள் சரியாகப் பின்ற்றவில்லை. I-PAC-யிடம் அதிக அளவு கட்சித் தரவுகள் இருந்தன. அமலாக்கத்துறை அங்கு சென்றபோது, முக்கியமான கட்சித் தகவல்கள் அங்கு இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். பிப்ரவரி 2024-ல் பதிவு செய்யப்பட்ட நிலக்கரி ஊழல் தொடர்பான கடைசி அறிக்கையை, தேர்தல் ஆண்டில் அமலாக்கத்துறை ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது?” எனக் கேள்வி எழுப்பினார். விசாரணை நடந்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.