IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது. இந்திய ஸ்பின்னர்களின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடாததுதான் இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணம் என உதவி பயிற்சியாளர் ரயான் டென் டோஷேட் வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்துள்ளார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 285 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.
Add Zee News as a Preferred Source
இந்திய அணி பேட்டிங்
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், கேப்டன் சுப்மன் கில்லும் களம் இறங்கினர். இருவரும் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பாக 70 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ரோகித் சர்மா 24 ரன்களில் அவுட்டாக, அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 53 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஒரு கட்டத்தில் இந்தியா 100 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்தது.
ஆனால், அதன் பிறகு வந்த விராட் கோலி 23 ரன்களுக்கும், ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களுக்கும் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுக்க, இந்தியா 118 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பெரும் தடுமாற்றத்திற்கு உள்ளானது. இந்த இக்கட்டான நிலையில் கை கோர்த்த கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தது. ஜடேஜா 27 ரன்களில் வெளியேறினாலும், ராகுல் ஒரு முனையில் நங்கூரம் போல் நிலைத்து நின்று விளையாடினார். இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தல அவர் 112 ரன்கள் எடுத்தார். இதனால், இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் கிறிஸ்டியன் கிளார்க் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
நியூசிலாந்து தடுமாற்றம்
சேஸிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணி, இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே தடுமாறியது. ஹர்ஷித் ரானா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளைத் தூக்க, 46 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணி. அந்தநேரத்தில் இந்தியா ஈஸியா ஜெயிச்சிடும் என்று ரசிகர்கள் நினைத்த நிலையில், டேரில் மிட்செல் நங்கூரமாக நிலைத்து நின்று விளையாடி, நியூசிலாந்து அணியை வெற்றிக்கே அழைத்து சென்றார்.
மிட்செல் சிறப்பான ஆட்டம்
இந்தியாவுக்கு எதிராக மிட்செல் சிறப்பாக விளையாடுவார் என்பதை கேப்டன் சுப்மன் கில் அறிந்திருந்தார். அதனாலேயே அவருடைய விக்கெட்டை எடுக்க இந்தியாவின் துருப்புச் சீட்டான குல்தீப் யாதவை சீக்கிரம் கொண்டு வந்தார். ஆனால், அவரை செட்டில் ஆக விடாமல் மிட்செல் முதல் ஓவரில் இருந்தே அதிரடி காட்டினார். குல்தீப்பின் பந்துவீச்சை அசால்ட்டாக எதிர்கொண்ட மிட்செல், 131 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதுகுறித்து பேசிய மிட்செல், “குல்தீப் இருபுறமும் பந்தை திருப்பக்கூடிய ஆபத்தான பவுலர். அவருக்கு எதிராகச் சரியான திட்டத்தோடு களம் இறங்கி, அவரைச் செட்டில் ஆக விடாமல் ரன் சேர்த்ததுதான் வெற்றிக்குக் காரணம்” என்று போட்டிக்குப் பிறகு பேசினார்.
டென் டோஷேட் அதிருப்தி
தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரயான் டென் டோஷேட், ஸ்பின்னர்களின் செயல்பாட்டில் தனது வருத்தத்தைப் பதிவு செய்தார். “நமது அணியின் ஸ்பின்னர்கள் வீசிய பந்துகளின் லென்த் சரியாக இல்லை. மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்கத் தவறிவிட்டோம். தோல்விக்கு இது மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது என்றாலும், ஸ்பின்னர்களின் செயல்பாடு இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். எங்கே தவறு நடந்தது என்பதைத் தீவிரமாக ஆய்வு செய்வோம்” என்றார்.
ஞாயிற்றுக்கிழமை கடைசி போட்டி
பும்ரா இல்லாத நிலையில் விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட குல்தீப் யாதவ், 10 ஓவர்களில் 82 ரன்களை வாரி வழங்கினார். ரவீந்திர ஜடேஜா ரன்களைக் கட்டுப்படுத்தினாலும் ஒரு விக்கெட்டைக் கூட எடுக்க முடியவில்லை. கேப்டன் சுப்மன் கில்லின் பீல்டிங் வியூகங்களும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இதனால், கடைசியில் ஒரு ‘ஸ்கூப்’ ஷாட் மூலம் பவுண்டரி அடித்து மிட்செல் மேட்சை முடிக்க, நியூசிலாந்து 1-1 எனத் தொடரைச் சமன் செய்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடக்க உள்ளது.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More