மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மும்பையில் ஏற்கனவே பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள மற்ற மாநகராட்சிகளிலும் பெரும்பாலானவற்றை பா.ஜ.க கூட்டணி கைப்பற்றி இருக்கிறது.

மும்பை அருகில் உள்ள நவிமும்பை மாநகராட்சியில் பா.ஜ.க 69 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இங்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 31 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று மும்பை அருகில் உள்ள தானே மாநகராட்சியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 24 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது.

உத்தவ்- ராஜ் தாக்கரே

இங்கு பா.ஜ.க வெறும் 5 இடங்களில் மட்டும் முன்னிலையில் இருக்கிறது. மற்றொரு முக்கிய மாநகராட்சியான நாசிக்கில் பா.ஜ.க மொத்தமுள்ள 119 இடங்களில் 57 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. சிவசேனா(ஷிண்டே) 40 இடங்களிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 12 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.

மும்பை அருகில் உள்ள மற்றொரு மாநகராட்சியான பன்வெல் மாநகராட்சியில் பா.ஜ.க மொத்தமுள்ள 78 வார்டுகளில் 22 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது. மற்ற கட்சிகள் சொற்ப இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன. மற்றொரு மாநகராட்சியான வசாய்-விரார் மாநகராட்சியில் பகுஜன் விகாஷ் அகாடி கட்சி மொத்தமுள்ள 115 வார்டுகளில் 65 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது. பா.ஜ.க இங்கு 45 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. மும்பை அருகில் உள்ள மற்றொரு முக்கிய நகரமான கல்யான்-டோம்பிவலி மாநகராட்சியில் பா.ஜ.க 22 வார்டுகளிலும், சிவசேனா(ஷிண்டே) 15 வார்டுகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. மீரா பயந்தர் மாநகராட்சியில் பா.ஜ.க 32 இடங்களில் முன்னிலை பெற்று அங்கு முன்னிலையில் இருக்கிறது.

இரண்டாவது இடத்தில் இருக்கும் காங்கிரஸ் 8 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது. உல்லாஸ் நகர் மாநகராட்சியில் சிவசேனா(ஷிண்டே) 17 வார்டுகளிலும், பா.ஜ.க 6 வார்டுகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. பீவாண்டி மாநகராட்சியிலும் பா.ஜ.க கூட்டணியே முன்னிலை பெற்றுள்ளது. சாம்பாஜி நகர் மாநகராட்சியில் பா.ஜ.க 24 வார்டுகளிலும், சிவசேனா(ஷிண்டே)18 வார்டுகளிலும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 15 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. இங்கு காங்கிரஸ் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.

நாக்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 151 வார்டுகளில் 101 வார்டுகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. இது தவிர கோலாப்பூர் மாநகராட்சியை பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் சேர்ந்து கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. சோலாப்பூர், அகோலா, நாண்டெட், சாங்கிலி, ஜல்காவ், அகில்யா நகர், துலே, ஜல்னா, இசல்கரஞ்சி போன்ற மாநகராட்சிகளை பா.ஜ.க கூட்டணி கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பர்பானி மாநகராட்சியில் மட்டும் முன்னிலையில் இருக்கிறது.

அமராவதி மற்றும் லாத்தூர் ஆகிய மாநகராட்சிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது. மாலேகாவ் மற்றும் தானே மாநகராட்சியில் சிவசேனா(ஷிண்டே) முன்னிலையில் இருக்கிறது. இதற்கு முன்பு ஒன்று பட்டு இருந்த சிவசேனா அதிக மாநகராட்சிகளில் வெற்றி பெற்று இருந்தது. ஆனால் இப்போது அந்த மாநகராட்சிகளை இரண்டு சிவசேனாக்களும் சேர்ந்து பா.ஜ.கவிடம் இழந்துள்ளன. இத்தேர்தல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. மொத்தமுள்ள 2869 வார்டுகளில் 1081 வார்டுகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. சிவசேனா 293 இடங்களிலும், காங்கிரஸ் 191 இடங்களிலும், சிவசேனா(உத்தவ்) 137 இடங்களிலும், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 119 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.