புதுடெல்லி,
மராட்டிய உள்ளாட்சி தேர்தலில் மார்க்கர் பேனாக்களில் பயன்படுத்தப்பட்ட அழியாத மையின் தரம் குறித்து சர்ச்சை எழுந்தது. இந்த மை மூலம் வாக்காளர்களின் விரலில் வைக்கப்பட்ட அடையாளத்தை எளிதில் அகற்ற முடியும் என்றும், இது போலி வாக்குப்பதிவுக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றன என மராட்டிய மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது.
இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ‘உண்மை என்ன என்பதை பார்க்காமல் மாநில தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றன என கூறுவது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை சரிந்து விட்டதையே காண்பிக்கிறது. வாக்கு திருட்டு என்பது தேசவிரோத செயல்’ என கூறி உள்ளார். இதற்கிடையே, ‘2011-ம் ஆண்டு முதல் அனைத்து உள்ளாட்சி தேர்தல்களிலும் இந்த பேனாக்களை பயன்படுத்தி வருகிறோம். இதுவரை எந்த குற்றச்சாட்டும் இல்லை’ என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.