புதுடெல்லி,
டெல்லியின் பல்வேறு நகரங்களிலும் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே கடுமையான குளிர்ச்சி நிலவுகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி என்ற அளவுக்கு குறைந்து காணப்படுகிறது. பாலம், சப்தர்ஜங், டெல்லி-என்.சி.ஆர்., இந்தியா கேட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
இது தவிரவும் முக்கிய நகரங்களில் காற்று மாசும் அதிகரித்து உள்ளது. தெளிவற்ற வானிலையும் காணப்படுகிறது. இதனால், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் சில விமானங்களின் வருகையில் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, டொரண்டோ, துபாய், மான்செஸ்டர், லண்டன், பாங்காக், பிளிசி, பாகு, கெய்ரோ, மிலன், கோபன்ஹேகன் போன்ற முக்கிய வெளிநாட்டு நகரங்களில் இருந்து டெல்லிக்கு வர கூடிய விமானங்கள் தாமதமாகி உள்ளன.
இதனால் இடையூறுகள் ஏற்படக்கூடும் என்றும் பயணிகளுக்கு அறிவுறுத்தல் வெளியிடப்பட்டு உள்ளது. அதனால், பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு நிலைமையை பற்றி கேட்டறிந்து கொள்ளும்படியும், முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.