கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் கட்டுப்பாட்டை எதிர்க்கும் நாடுகளுக்கு வரி: பிப்.1-ம் தேதி முதல் அமல் – டிரம்ப் அறிவிப்பு

நூக் [கிரீன்லாந்து],

அமெரிக்காவில் மீண்டும் பொற்காலம் உருவாவதற்கான பணிகளை செய்வேன் என உறுதியேற்று செயலாற்றி வரும் ஜனாதிபதி டிரம்ப். அதற்காக பிற நாடுகளின் மீது கடுமையான வரிகளை விதித்து உத்தரவிட்டு வருகிறார். இதனால், அமெரிக்க கஜானாவுக்கு நிறைய டாலர்கள் வந்து குவியும் என கணக்கு போடுகிறார்.

சமீபத்தில், உலக அளவில் பெரிய எண்ணெய் இருப்பு கொண்ட வெனிசுலாவின் அதிபரை கைது செய்து, அமெரிக்காவுக்கு நாடு கடத்தினார். உலக நாடுகளை அதிர செய்த இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக கொலம்பியாவை கைப்பற்ற முயற்சிப்பார் என முதலில் தகவல் வெளியானது. இந்த சூழலில் கிரீன்லாந்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கிரீன்லாந்து விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து வரும் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த 8 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத சுங்க வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். சமூக ஊடகத்தில் நேற்று அவர் வெளியிட்ட பதிவில், டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பின்லாந்து உள்பட 8 நாடுகளுக்கு இந்த வரி விதிக்கப்படும் என்றும், சுங்க வரி வரும் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கிரீன்லாந்தை முழுமையாகவும் முழு உரிமையுடனும் அமெரிக்கா வாங்குவதற்கான ஒப்பந்தம் ஜூன் 1-க்குள் ஏற்படாவிட்டால், இந்த சுங்க வரி 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். கிரீன்லாந்து தற்போது டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.