சின்னசாமி மைதானத்திற்கு கிடைத்தது கிரீன் சிக்னல்…ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சி

பெங்களூரு ,

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்குமா, நடக்காதா?” என்று தவித்துக் கொண்டிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ரசிகர்களுக்கு, தற்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ஐபிஎல் 2026 தொடரின் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் நடத்த கர்நாடக அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது.

இதுகுறித்து கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் , “பெங்களூரு சின்னசாமி திடலில் சர்வதேச மற்றும் ஐபிஎல் போட்டிகளை நடத்த மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு கர்நாடக அரசின் உள்துறை அனுமதி அளித்துள்ளது. அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றுவதில் கிரிக்கெட் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், ஏற்கெனவே ஒரு விரிவான இணக்க வரைபடத்தை மறு ஆய்வுக்குழுவின் முன் கிரிக்கெட் சங்கம் வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் கூட்ட மேலாண்மை நடவடிக்கைகளை செயல்படுத்துவதிலும் உறுதிபூண்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, சின்னசாமி திடலில் 300 முதல் 350 வரையிலான செயற்கை நுண்ணறிவு கேமராக்களை பொருத்துவதற்கு ஆகும் ரூ. 4.5 கோடி செலவை ஆர்சிபி அணி நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கேமராக்களின் மூலம் கூட்டத்தின் நடமாட்டம், பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் வரிசைகள், பார்வையாளர்கள் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களைக் கண்காணிப்பதோடு, அங்கீகரிக்கப்படாத நுழைவுகளையும் சரியாக கண்காணிக்க உதவும் என்று தெரிவிக்கின்றனர்.

ஆர்சிபி ரசிகர்களால் மறக்க முடியாத மற்றும் மறக்க விரும்பாத ஒரு நாள் கடந்த ஆண்டு ஜூன் 4. 2025 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி தனது முதல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றியைக் கொண்டாடச் சின்னசாமி மைதானத்தில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட பேரணியின் போது, எதிர்பாராத விதமாகக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே, முக்கிய போட்டிகளை நடத்த இந்த மைதானத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.