இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்திய மண்ணில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தாலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி இந்த தொடரை கைப்பற்றியுள்ளனர். பரபரப்பாக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
Add Zee News as a Preferred Source
நியூசிலாந்து பேட்டிங்
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தாலும், டேரி மிச்சல் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். டேரி மிச்சல் 137 ரன்களும், கிளன் பிலிப்ஸ் அதிரடியாக 106 ரன்களும் அடிக்க ஸ்கோர் உயர்ந்தது. 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் அடித்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷிதீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றினர்.
இந்தியா பேட்டிங்
கடினமான இலக்கை எதிர்த்து ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. பவர் பிளே முடிவதற்குள் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இரண்டு பேரும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து அதிர்ச்சி கொடுத்தனர். இந்த கட்டத்திலேயே போட்டி கிட்டத்தட்ட முடிந்தது. இருப்பினும் விராட் கோலி மற்றும் நிதீஷ் குமார் கூட்டணி நம்பிக்கை அளித்தது. நிதிஷ்குமார் ரெட்டி சிறப்பாக விளையாடி 53 ரன்கள் அடித்தார். அவர் ஆட்டமிழக்க அடுத்து களம் இறங்கிய ஜடேஜாவும் 12 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
ஹர்ஷித் ராணா
நியூசிலாந்து எளிதாக வெற்றி பெறும் என்று ரசிகர்கள் நிலைத்த நிலையில், ஹர்ஷித் ராணா மற்றும் விராட் கோலி கூட்டணி யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆடியது. குறிப்பாக ஹர்ஷித் ராணா தான் ஒரு ஆல்ரவுண்டர் என்பதை இந்த போட்டியிலும் நிரூபித்தார். அதிரடியான சிக்ஸர்களுடன் 52 ரன்கள் அடித்தார். இருப்பினும் ஜகரி ஃபௌல்க்ஸ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் நிதானமாக ஆடிய விராட் கோலி இந்த ஆட்டத்தை முடித்துக் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 124 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 46 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் நியூசிலாந்த அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.
About the Author
RK Spark