இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் தற்போது நிறைவடைந்துள்ளது. 1-1 என்று சம நிலையில் இருந்த இந்த தொடரில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்திருந்த நிலையில் ,தற்போது ஒரு நாள் தொடரையும் வென்றுள்ளனர். அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளனர். அடுத்த மாதம் தொடங்கும் டி20 உலக கோப்பைக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக இந்த தொடர் இருக்கும்.
Add Zee News as a Preferred Source

அடுத்த ஒரு நாள் தொடர் எப்போது?
இந்திய அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தற்போது ஒரு நாள் தொடரில் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதன் காரணமாக ஒரு நாள் தொடர் எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பின்னர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஒருநாள் தொடரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். அடுத்ததாக இந்திய அணி ஜூலை மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. எனவே கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பிறகு தான் இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடம்பெற உள்ளனர்.
டி20 உலக கோப்பை முடிந்ததும் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை ஐபிஎல் போட்டிகள் நடக்கும். இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்காக இவர்கள் இருவரும் களம் இறங்குவார்கள். இருப்பினும் இந்திய அணியில் விளையாட இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த ஒருநாள் தொடர் ஜூலை 14ம் தேதி தொடங்குகிறது.
இங்கிலாந்து போட்டி அட்டவணை
முதல் ஒருநாள் போட்டி: ஜூலை 14, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம்.
இரண்டாவது ஒருநாள் போட்டி: ஜூலை 16, கார்டிஃப்.
மூன்றாவது ஒருநாள் போட்டி: ஜூலை 19, லார்ட்ஸ், லண்டன்.

ரோகித் சர்மா
மே 2025ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 121 ரன்களும் விளாசி தனது கிளாஸை நிரூபித்தார் ரோஹித். இருப்பினும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 3 போட்டிகளில் 61 ரன்கள் மட்டுமே எடுத்து சற்று சறுக்கலை சந்தித்துள்ளார்.
விராட் கோலி
மறுபுறம், விராட் கோலி தனது பேட்டிங் அசுரத்தனத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். அதிவேகமாக 14,000 ஒருநாள் ரன்களையும், 28,000 சர்வதேச ரன்களையும் கடந்து சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 3 போட்டிகளில் 240 ரன்கள் குவித்து தொடர் நாயகனாக ஜொலித்தார். இதன் மூலம் அவர் மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார். ரோகித் மற்றும் விராட் ஆகிய இருவரும் 2027 ஒருநாள் உலக கோப்பையை மனதில் வைத்து விளையாடி வருகின்றனர். இவர்களின் சமீபத்திய பார்ம், அவர்கள் அணியில் நீடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.
About the Author
RK Spark