இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து இந்த தொடரை வென்றது மட்டுமில்லாமல் 37 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்தது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் இருந்தபோதிலும் அனுபவம் இல்லாத மிடில் ஆர்டர் பேட்டிங் மற்றும் பவுலிங்கால் இந்திய அணி இந்த தொடரை இழந்துள்ளது. 2027 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் தோல்விக்கான முக்கிய காரணங்களை பற்றி பார்ப்போம்.
Add Zee News as a Preferred Source

பந்துவீச்சில் சொதப்பல்
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. பவர் பிளே முடிவதற்குள் அர்ஸதீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் சிறப்பாக வந்து வீசியிருந்தனர். முதல் மூன்று விக்கெட்களை அடுத்தடுத்து எடுத்திருந்தாலும், பின்னர் டேரி மிச்சல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் போட்டனர். குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகிய சிறந்த ஸ்பின்னர்கள் இருந்த போதிலும் அவர்களால் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. இது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
சுப்மன் கில் கேப்டன்சி
தென் ஆப்பிரிக்கா தொடரில் கேஎல் ராகுல் தலைமையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி தொடரை வென்றது. காயத்திற்கு பிறகு நியூசிலாந்து தொடரில் அணிக்கு திரும்பிய சுப்மன் கில் கேப்டன்சி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆரம்பத்தில் மூன்று விக்கெட்கள் விழுந்த போதிலும் நான்காவது விக்கெட்டை இந்திய அணியின் பவுலர்களால் எடுக்க முடியவில்லை. இதற்கு சரியான முறையில் பவுலர்களை ரொட்டேட் செய்யாததும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பவுலர்களின் பக்கத்தில் நிற்காமல் கில் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்தார். விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் தான் பந்து வீச்சாளர்களுக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கி வந்தார். இது சுப்மன் கில்லின் கேப்டன்சி அனுபவமில்லாமையை வெளிப்படுத்துகிறது.

இந்திய அணியின் பேட்டிங்
338 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்த்து களம் இறங்க இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா, சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மிடில் ஆர்டரில் கை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட கே எல் ராகுல் மற்றும் ஜடேஜா இருவரும் சொதப்பினர். இந்த ஐந்து பேரில் மூன்று பேர் சிறிது ரன்கள் அடித்திருந்தாலும் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று இருக்க முடியும்.
ஜடேஜாவின் எதிர்காலம்
ஒரு நாள் அணியில் ஜடேஜாவின் தேர்வு கேள்விக்குறியாகி வருகிறது. பேட்டிங், பௌலிங் மற்றும் பில்டிங் என அனைத்திலும் சொதப்பி வருகிறார் ஜடேஜா. ஆஸ்திரேலியா தொடரில் அவருக்கு பதிலாக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதன் பிறகு தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து தொடரில் அக்சர் பட்டேலுக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டார். இருப்பினும் அவரால் போதிய இம்பாக்டை கொடுக்க முடியவில்லை. இதனால் அடுத்தடுத்த தொடர்களில் அவரது இடம் கேள்விக்குறியாகியுள்ளது. அதே போல இந்தியாவின் பீல்டிங்கும் படுமோசமாக இருந்தது. ஆனால் நியூசிலாந்தின் பீல்டிங் தான் அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. பல பௌண்டரிகளை தடுத்தும், முக்கியமான நேரத்தில் கேட்ச்களை பிடித்தும் அவர்களின் வெற்றியை உறுதி செய்தனர்.
About the Author
RK Spark