புதுடெல்லி,
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் சீனதைபே வீரர் லின் சுன் யி, இந்தோனேசிய வீரர் ஜோனதன் கிறிஸ்டியுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லின் சுன் யி 21-10, 21-18 என்ற நேர் செட்டில் ஜோனதன் கிறிஸ்டியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அவர் பேட்மிண்டனில் சூப்பர்750 வகை போட்டியில் மகுடம் சூடுவது இதுவே முதல் முறையாகும்.
பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான தென்கொரியாவின் அன்சே யங் 21-13, 21-11 என்ற நேர் செட்டில் 43 நிமிடங்களில் சீனாவின் வாங் ஷியியை தோற்கடித்து மீண்டும் பட்டத்தை கைப்பற்றினார். கடந்த வாரம் மலேசிய ஓபனில் இறுதி சுற்றில் வாங் ஷியை புரட்டியெடுத்த அன்சே யங் இப்போதும் மறுபடியும் ஆதிக்கம் செலுத்தியுள்ளார்.
‘தொடர்ச்சியான போட்டிகளால் கடந்த இரு வாரங்களாக நான் சோர்ந்து போயிருக்கிறேன். ஆனாலும் இங்கு பட்டத்தை வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என ஒலிம்பிக் சாம்பியனான அன் சே யங் குறிப்பிட்டார். கோப்பையை வென்ற இவருக்கும் தலா ரூ.60 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. சொந்த மண்ணில் நடந்த இந்த போட்டியில் இந்தியர்கள் யாரும் காலிறுதியை தாண்டவில்லை என்பது கவனிக்கத்தக்கது.