இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான ரோகித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 338 ரன்கள் அடித்தால் வெற்றி என்று நிலையில் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் அவரது கிரிக்கெட் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதுதான் ரோகித் சர்மாவின் கடைசி போட்டியா என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
Add Zee News as a Preferred Source

நியூசிலாந்து தொடரில் சொதப்பல்
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், மூன்று போட்டிகளிலும் ரோகித் சர்மா சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்துள்ளார். முதல் போட்டியில் 26 ரன்களும், இரண்டாவது போட்டியில் 21 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் வெறும் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் இந்த நியூசிலாந்து தொடரில் ஒரு அரை சதம் கூட ரோகித் சர்மா அடிக்கவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோகித், ஆரம்பத்திலிருந்தே சற்றுத் தடுமாற்றத்துடனே காணப்பட்டார். வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ்டியன் கிளார்க் வீசிய 4வது ஓவரில், ரோகித் கொடுத்த கேட்ச்சை விக்கெட் கீப்பர் மிட்செல் ஹே தவறவிட்டார்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ரோகித் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதே ஓவரில் மிட்-ஆன் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் சேர்த்து ரோகித் எடுத்த மொத்த ரன்கள் வெறும் 61 மட்டுமே. அவரது சராசரி 20.33 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 76.25 ஆகவும் குறைந்துள்ளது. இதற்கு முந்தைய தென் ஆப்பிரிக்க தொடரில் 3 போட்டிகளில் 146 ரன்கள் குவித்து, 48.66 சராசரியுடன் சிறப்பாக விளையாடிய ரோகித், சொந்த மண்ணில் இப்படி சரிவை சந்தித்திருப்பது பலருக்கும் கவலையளிக்கிறது.
ரோகித் சர்மாவின் ஓய்வு?
இந்த சொதப்பலான தொடருக்கு பிறகு சமூக வலைத்தளங்களில் பலரும் இதுதான் ரோகித் சர்மாவின் கடைசி போட்டியாக இருக்குமோ என்று கேள்வி எழுப்புகின்றனர். ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ரோஹித் சர்மா 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பையை மனதில் வைத்து விளையாடி வருகிறார். இதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளும் விதமாக உடல் எடையை முழுவதும் குறைத்து காணப்படுகிறார்.

இந்தியாவின் அடுத்த போட்டி
அடுத்த மாதம் டி20 உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணிக்கு அடுத்த ஐந்து மாதங்களுக்கு எந்த ஒரு சர்வதேச ஒரு நாள் போட்டிகளும் இல்லை. அடுத்ததாக ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளனர். இதற்கிடையில் ஐபிஎல் தொடர் வரவுள்ளதால் ரோகித் சர்மா தன்னுடைய பழைய பார்மை மீண்டும் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை இந்திய ஜெர்சியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்து வருகின்றனர்.
About the Author
RK Spark