வங்காளதேசத்தில் இந்து வியாபாரி அடித்து கொலை

டாக்கா,

வங்காளதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதில் 9 இந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்துக்கள் வீடுகள், கடைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் மேலும் ஒரு இந்து கொலை செய்யப்பட்டார்.

காஜிபூர் மாவட்டம் காளிகஞ்ச் பகுதியில் ஓட்டல் மற்றும் இனிப்பு கடை நடத்தி வந்தவர் லிட்டன் சந்திர கோஷ் (வயது 55). இவரது கடைக்கு மசூம் மியா என்ற வாலிபர் வந்தார். அப்போது அவருக்கும், கடை ஊழியர் அனந்த தாஸ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. மேலும் மசூமின் பெற்றோர் ஸ்வபன் மியா – மஜேதா காதுன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து அனந்த தாசை தாக்கினர்.

அவர்களை லிட்டன் சந்திர கோஷ் சமாதானப்படுத்தி அனந்த தாசை காப்பாற்ற முயன்றார். அப்போது லிட்டன் சந்திர கோஷை சரமாரியாக தாக்கினர். அவரது தலையில் மண்வெட்டியால் தாக்கினர். இதில் லிட்டன் சந்திர கோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலில் ஈடுபட்ட மசூம் மியா, ஸ்வபன் மியா, மஜேதா காதுன் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்தக் கொலை அங்குள்ள மக்களிடையே அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் நியாயமான விசாரணை மற்றும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.