பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியாக இருந்தது.
அதேசமயத்தில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திக்கேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லீலா நடித்த ‘பராசக்தி’ திரைப்படமும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ‘பராசக்தி’ படம் திரையரங்கில் வெளியாகிவிட்டது. ஆனால் ‘ஜனநாயகன்’ படம் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தால் வெளியாகவில்லை.

இந்நிலையில் விஜய் குறித்து சுதா கொங்கரா பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
‘India Today’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் சுதா கொங்கரா, “எனக்கு விஜய் சாரை ரொம்ப ரொம்ப பிடிக்கும். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை. அதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.
விஜய் சாரிடம் இதனை நேரடியாகவே நான் சொல்லி இருக்கிறேன். நாங்கள் இணைந்து படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது.
இசை வெளியீட்டு விழாவிலே விஜய் சாருடைய ‘ஜனநாயகன்’ படத்தை நான் FDFS-ல் பார்ப்பேன் என்று தெளிவாக சொல்லி விட்டேன்.

அந்த படத்தின் வெளியீட்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்சார் போர்டு இவ்வாறு செய்தது தவறு. எந்தவொரு படத்துக்கும் இதுபோன்று நடக்கக்கூடாது.
‘ஜனநாயகன்’ படத்துடன் நாங்கள் போட்டி போட வேண்டுமென்று நினைக்கவே இல்லை. பண்டிகை விடுமுறை எங்களுக்கும் தேவைப்பட்டது. அவ்வளவுதான்” என்று பேசியிருக்கிறார்.