விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நீர்காத்த ஐயனார் கோயில் : உறவுப் பிரச்னைகள் தீர்க்கும் தலம்!

தமிழக கிராமங்கள் தோறும் எழுந்தருளி மக்களைக்காக்கும் தெய்வமாகத் திகழ்பவர் ஐயனார். கம்பீரமான அவர் தோற்றமே நம்மை தைரியப்படுத்தி வாழவைக்கும். அப்படி ஐயனார் எழுந்தருளியிருக்கும் தலங்களில் மிகவும் முக்கியமான தலங்கள் சில உண்டு. அப்படிப்பட்ட தலம்தான் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இருந்து சுமார் 13 கி.மீ. தூரத்தில் உள்ள நீர்காத்த ஐயனார் கோயில்.

இந்த ஆலயம் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ராஜராஜ சோழன் கட்டியது என்ற ஒரு தகவலும் உள்ளது. 13-ம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியனின் ஆட்சியில் இருந்த இந்த வனத்தை, பந்தள அரசன் ஒருவன் படையெடுத்து ஆக்கிரமிப்பு செய்தான் என்றும் அதனால் கோபம் கொண்ட பராக்கிரம பாண்டியன், பெரும் படையை அனுப்பி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இந்தப் பகுதியை மீட்டான் என்றும் ஒரு தகவல் உள்ளது.

நீர்காத்த ஐயனார்

பாண்டிய வீரர் போர் முடித்துத் திரும்பிக்கொண்டிருந்தபோது, ஐயனார் கோயில் அருகில் இருந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. செய்வதறியாது தவித்த பக்தர்கள் ஐயனாரை மனம் உருகவேண்டினர். அப்போது ஐயனார் மனம் இரங்கி அவர்களுக்கு அருள் செய்தார். ஆற்றின் கரையில் இருந்த சில பிரமாண்ட மரங்கள் வேரோடு வீழ்ந்து மறுகரைக்குப் பாலம்போல் ஆயின. இதைக் கண்ட பக்தர்கள் அதிசயத்தில் வியந்து ஐயனாரைத் துதித்துக்கொண்டே மறுகரைக்குச் சென்று சேர்ந்தனர். இப்படி நீர்ப் பெருக்கில் இருந்து காத்து அருளிய ஐயனார் என்பதால் அவருக்கு ‘நீர்காத்த ஐயனார்’ என்கிற திருநாமம் ஏற்பட்டது என்கிறார்கள்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. விடுதலை வீரர்களைச் சுட்டு வீழ்த்த ஆங்கிலேயே காவல்காரர்கள் துப்பாக்கியோடு ஓடிவந்தனர். அப்போது வீரர்கள் தப்பிக்க இந்தக் கோயிலுக்குள் சரணடைந்து ஐயனாரை வேண்டினர். ஆனாலும் விடாமல் துரத்திய ஆங்கிலேயர்கள் ஆற்றைக் கடந்தால் கோயிலில் இருக்கும் விடுதலைப் போராட்டக் காரர்களைச் சுட்டுவிடலாம் என்னும் நிலை. அப்போது ஆற்றில் நீர் திடீரெனப் பெருக்கெடுத்தது. வெள்ளத்தைக் கண்டு ஆங்கிலேயர்கள் பயந்து ஓரடி பின்வாங்கினர். அடுத்த கணம் அந்த வெள்ளத்தில் நீரோடு நீராகவே வெள்ளைக் குதிரையில் ஐயனார் காட்சி கொடுக்க ஆங்கிலேயர்கள் மிரண்டு போனார்கள். அடுத்த கணம் கீழே விழுந்து அவரைத் தொழுது அங்கிருந்து தப்பி ஓடினர் என்னும் சம்பவத்தை ஊர்க்காரர்கள் உணர்ச்சிபொங்க சொல்கிறார்கள்.

ஐயனார்

இப்படித் தன்னைத் தஞ்சம் என்று சரணடைந்தவர்களை எல்லாம் காக்கும் காவல் தெய்வமான நீர்காத்த ஐயனார், இன்றும் ஓடைக்கு அருகே வீற்றிருக்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், பாலாறு, நீராறு ஒன்றாகச் சேரும் ஆற்றங்கரை ஓரத்தில் அழகும் கம்பீரமும் கொண்டதாக விளங்குகிறது இந்தக் கோயில். வனலிங்க சாமி, தலைமை சாமி, பெருமாள், லட்சுமி, சின்ன ஓட்டக்காரசாமி, பெரிய ஓட்டக்காரசாமி, வனகாளி, மாடன், மாடத்தி, ராக்காச்சி அம்மன், வனப் பேச்சியம்மன், கருப்பசாமி, தர்மராஜர், சப்தகன்னிமார் என ஏகப்பட்ட தெய்வங்களின் ஊடே அமர்ந்திருக்கிறார் நம் ஐயனார்.

கருவறையில் முறுக்கு மீசையும் கலங்கடிக்கும் விழிகளும் கொண்டு ஐயனார் பக்தர்களுக்காகக் காத்திருக்கிறார். குத்துவாளும் நீண்ட போர்வாளும் ஏந்தி, தலைப்பாகையும் தண்டமும் கொண்டு எழிலுடன் நிற்கிறார் ஐயனார்.

ஒவ்வொரு மாதப் பௌர்ணமியும் அமாவாசையும் இங்கு விசேஷம். இங்கு வந்து வேண்டிக்கொண்டால் சகலவிதமான அச்சங்களும் நீங்கும். குறிப்பாக தீய சக்திகள் குறித்து வீணான அச்சம் கொண்டோர் இங்கு வந்தால் நிச்சயம் குணம் பெறுவார்கள்.

இந்த ஐயனாரை வழிபட்டால், வம்பு வழக்குகள் தீரும்; கணவன் – மனைவி சண்டைகள் நீங்கும்; உறவுகளால் உண்டாகும் பிரச்னைகள் போகும் என்பது நம்பிக்கை. உங்களின் வளர்ச்சியால் பொறாமை கொண்டோர், உங்களுக்கு ஏதேனும் தீங்குகள் செய்துவிடுவார் என்று பயம் கொள்கிறீர்களா? அந்த பயத்தை உடனே போக்கிவிடுவார் இந்த ஐயனார்.

நீர்காத்த ஐயனார் கோயில்

இன்றும் இரவு நேரத்தில் இந்த ஐயனார் தீயசக்திகளிலிருந்து ஊர் மக்களைக் காப்பதற்காகக் குதிரைமீது சவாரி போவார். அப்போது யாரும் எதிர்படக்கூடாது. அதனாலேயே ஐயனார் கோயில்கள் மாலைக்கு மேல் திறந்து இருப்பதில்லை. வாய்ப்பு இருப்பவர்கள் நீர்காத்த ஐயனை தரிசித்தால், நிச்சயம் நிவாரணம் பெறுவார்கள்” என்கிறார்கள் கோயில் நிர்வாகிகள்.

சித்திரை மாதம் கோயில் கொடைத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தென்மாவட்ட மக்கள் ஆயிரக் கணக்கில் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்களும் முருக பக்தர்களும் இந்தக் கோயிலுக்கு வந்து ஐயனாரை வழிபட்டு மாலை அணிகிறார்கள்.

கோயில் நடை காலை 8 முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். மழைக் காலங்களில், கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள ஐயனார் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்பதால், கவனத்துடன் செல்ல வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.