இந்திய அணி தற்போது சீனியர் வீரர்கள் குறைவாகவும், இளம் வீரர்கள் அதிகமாகவும் உள்ள புதிய அணியாக வலம் வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் சீனி வீரர்கள் அனைவரும் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து முற்றிலும் ஒரு புது இந்திய அணியை காணலாம். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஏற்கனவே விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஒரு நாள் உலக கோப்பையுடன் இவர்களும் ஓய்வை அறிவிப்பார்கள். இளம் வீரர்களின் ஆதிக்கத்தால் பல சீனியர் வீரர்களுக்கு தற்போது அணியில் இடம் கிடைக்காமல் உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுடன் சில சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
Add Zee News as a Preferred Source

இஷாந்த் சர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் இஷாந்த் சர்மா. 2007 ஆம் ஆண்டு தன்னுடைய 19 வயதில் இந்திய அணியில் அறிமுகமான இவர் 300க்கும் அதிகமான டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தாலும் கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு அவருக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணம் சிராஜ், பிரசித் கிருஷ்ணா போன்ற இளம் வேக பந்துவீச்சாளர்கள் அணிக்குள் வந்ததால் சீனியர் வீரரான இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. தற்போது 37 வயதாகும் இஷாந்த் சர்மா ஐபிஎல் தொடர்களில் விளையாடி வருகிறார். இதுவரை 311 டெஸ்ட் விக்கெட்டுகள், 115 ஒரு நாள் விக்கெட்டுகள் எடுத்துள்ளார் இஷாந்த் சர்மா. இந்நிலையில் இந்த ஆண்டு அவர் ஓய்வை அறிவிக்கலாம்.

அஜிங்க்யா ரஹானே
சில போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும், பல்வேறு போட்டிகளில் துணை கேப்டன் ஆகவும் இருந்தவர் அஜிங்க்யா ரஹானே. டெஸ்ட் அணியில் தன்னுடைய இடத்தை நீண்ட காலமாக தக்க வைத்துக் கொண்ட அஜிங்க்யா ரஹானேவால், சமீப காலமாக 15 பேர் கொண்ட அணியில் கூட இடம் கிடைக்கவில்லை. ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடி, மும்பை அணிக்காக உள்ளூர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து வந்தாலும் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இளம் வீரர்கள் அனைத்து பார்மட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய வருவதன் காரணமாக, அஜிங்க்யா ரஹானேவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது 38 வயதாகும் அஜிங்க்யா ரஹானே இதுவரை 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அவருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை. இதனால் அவர் ஓய்வை அறிவிக்கலாம்.

யுஸ்வேந்திர சஹால்
அஸ்வின் மற்றும் ஜடேஜா காம்போவிற்கு பிறகு, யுஸ்வேந்திர சஹால் மற்றும் குல்தீப் யாதவ் காம்போவை அதிகம் நம்பியது பிசிசிஐ. இருப்பினும் யுஸ்வேந்திர சஹால்க்கு சமீபத்திய ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை அணி இடம் பெற்று இருந்தாலும், அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல்லில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தாலும் 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னாய் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால், யுஸ்வேந்திர சஹால்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டுடன் அவர் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது.
About the Author
RK Spark