'ஒல்லி'யாக இருந்தாலும் 'பெல்லி' இருந்தால்..!' – இந்திய மரபணு உருவாக்கும் மாரடைப்பு ஆபத்து!

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மட்டும் உடலில் கொழுப்பு அதிகமாக சேர்வதால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற இதய ரத்தநாள நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் எல்லாம் வராது என்றே பலரும் கருதுகின்றனர். ஆனால் ஒல்லியாக இருப்பவர்களுக்கும் இதுபோன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்கிறார் சென்னையைச் சேர்ந்த இதய மருத்துவர் துர்கா தேவி.

uncontrolled diabetes

“கடந்த 8 ஆண்டுகளாக கட்டுப்பாடற்ற சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருந்த 46 வயது பெண் ஒருவர், நெஞ்சு வலி அறிகுறியோடு சிகிச்சைக்கு வந்தார். மாரடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு, ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் இதயத்தின் முக்கிய ரத்தக்குழாயில் அடைப்பு இருந்ததால், ஸ்டென்ட் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபோன்ற நிகழ்வுகள் சென்னை உள்ளிட்ட இந்தியாவில் பல பகுதிகளிலும் அதிகரித்துள்ளன.

சர்க்கரைநோய்

நம் நாட்டில் 7.7 முதல் 10.1 கோடி பேர் வரை சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இளம் வயதினருக்கு சர்க்கரைநோய் பாதிப்பு ஏற்படுவதற்கு முறையற்ற உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் தொப்பை ஆகியவை முக்கிய காரணங்களாகும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.

silent heart attack

மரபணு ரீதியான காரணங்கள், வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவை இந்தியாவில் சர்க்கரை நோய் தொடர்பான இதய நோய்கள் அதிகரிக்க காரணமாக உள்ளன. கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயின் காரணத்தால் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து அடைப்பை உருவாக்குகிறது. இதன் பாதிப்புகள் பல வகைகளில் வெளிப்படும். இதய ரத்தக்குழாய் நோய், இதய செயலிழப்பு, பக்கவாதம் (ஸ்ட்ரோக்) கால்களுக்குச் செல்லும் ரத்தக்குழாய் பாதிக்கப்படுவது உள்ளிட்டவை ஏற்படுகின்றன. மேலும் நரம்பு மண்டல பாதிக்கப்படுவதால் வலி தெரியாமலேயே ரத்த ஓட்டம் குறைவது அல்லது அமைதியான மாரடைப்பு (Silent Heart attack) போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு பிரச்னையை மேலும் தீவிரப்படுத்துகின்றன.

கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் நீண்ட காலமாகக் கூடுதலாக இருக்கும் சர்க்கரையின் அளவு, ரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் ஒருவித அழுத்தத்தை உருவாக்கி, சில தேவையற்ற வேதிப்பொருள்களையும் உற்பத்தி செய்யும். இதனால் ரத்தக் குழாய்களில் வீக்கம் மற்றும் பெரிய தமனிகள் தடித்து, கொழுப்பு படிவதை வேகப்படுத்துகிறது. மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதும் சர்க்கரை நோயாளிகளுக்கு பொதுவான பிரச்னையாகும். இதனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

இந்திய மரபணு…

இந்தியாவில் இந்தப் பாதிப்புகள் தீவிரமாக இருப்பதற்குக் காரணம் ‘ஏசியன் இந்தியன் ஃபினோடைப்’ என்று அழைக்கப்படும் மரபணு ரிதீயான உடலமைப்பு முறைதான். சாதாரண பி.எம்.ஐ கணக்கீட்டின்படி ஒரு நபர் பருமனாகத் தெரியவில்லை என்றாலும், அவரது மரபணு மற்றும் வளர்சிதை மாற்ற அமைப்பின் காரணமாக வயிற்றுப் பகுதியில் அதிகக் கொழுப்பு சேருகிறது.

இதய மருத்துவர் துர்கா தேவி

ஒல்லியாக இருப்பவர்கள் தொப்பையை ஒரு பெரிய பிரச்னையாக நினைப்பதில்லை. ஆனால் தொப்பையில் சேர்ந்திருக்கும் கொழுப்பானது இதய நோய் வருவதற்கான ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது. இதனால், ஐரோப்பியர்களைவிட இந்தியர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இளம் வயதிலேயே இதய நோய்கள் ஏற்படுகின்றன.

அதே போல ரத்தக்குழாய்களில் அடைப்போ உயர் ரத்த அழுத்தமோ இல்லாவிட்டாலும், சர்க்கரை நோயின் தீவிரத்தால் இதயத் தசைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு இதயம் பலவீனமடையலாம். இது இறுதியில் இதயச் செயலிழப்புக்கு வழிவகுக்கும். அதே போல சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு அல்லது பாதிப்பு ஏற்படுவதால் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயமும் உள்ளது.

exercise

தவிர்ப்பது எப்படி?

சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டதும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயை எப்போது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதய பாதிப்புகளைத் தவிர்க்க, ரத்த அழுத்தத்தை 130/80-க்கும் குறைவாகவும், கெட்ட கொழுப்பை 100 mg/dL-க்கும் குறைவாகவும் பராமரிக்க வேண்டும். கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள் மாரடைப்பு அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

தொப்பையைக் குறைங்க…

வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைக்க மாவுச்சத்துள்ள உணவுகளைக் குறைத்து, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பயறு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதோடு முறையான உடற்பயிற்சியும் அவசியம்” என்கிறார் மருத்துவர் துர்கா தேவி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.