குடியரசு தின கொண்டாட்டம்; 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு

புதுடெல்லி,

நாட்டின் 77-வது குடியரசு தினம் வருகிற 26-ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கலாசார பாரம்பரிய செறிவை கவுரவிக்கும் வகையில் டெல்லி கடமை பாதையில் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.

இதில், வந்தே மாதரம் தேசிய பாடலின் 150 ஆண்டு கால கொண்டாட்டமும் நடைபெறுகிறது. ராணுவத்தின் வலிமை மற்றும் கலாசார பன்முக தன்மையின் வளமை ஆகியவற்றை பறைசாற்றுவதுடன் இந்நிகழ்ச்சியும் கூட நடைபெற உள்ளது.

இதற்காக நேற்று (19-ந்தேதி) முதல் 26-ந்தேதி வரை இந்திய ராணுவம், கடற்படை, விமான படை, கடலோர காவல் படை மற்றும் பிற மத்திய ஆயுத படைகள் இணைந்து வந்தே மாதரம் தொடர்பாக இந்தியா முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும்படி, தேச கட்டமைப்பில் பெரும் பங்காற்றிய, பல்வேறு நிலைகளில் உள்ளவர்களை கவுரவிக்கும் வகையில், 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

நாட்டுக்கு வருவாய் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்காக பணியாற்றியவர்கள், சிறந்த புதிய கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பலரும் இதில் அடங்குவர்.

அவர்கள் கடமை பாதையில் அமர வைக்கப்படுவர். தொடர்புடைய மந்திரிகளுடன் பேசுவதற்கான சந்தர்ப்பங்களும் ஏற்படுத்தி தரப்படும். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

டெல்லி போலீசார் தரப்பில், தொழில்நுட்பம் சார்ந்த பாதுகாப்பு உபகரணங்களும் விரிவான அளவில் பயன்படுத்தப்படும். சிறப்பு விருந்தினர்கள் மற்றும் டிக்கெட் வைத்திருப்போர் அழைப்பிதழில் உள்ள விவரங்களை கவனத்துடன் படித்து அதன்படி நடந்து கொள்ளும்படி போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.

இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

குடியரசு தின விழாவையொட்டி, விமான சாகச நிகழ்ச்சிகள், 2,500 கலைஞர்கள் பங்கேற்கும் கண்கவர் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெறும். ராணுவம், கடற்படை மற்றும் விமான படை என முப்படைகளின் அணிவகுப்பு ஆகியவற்றுடன் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகளை சேர்ந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் இடம்பெறும்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.