ஐதராபாத்,
தெலுங்கானா மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பாரத ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா. இவர் முன்னாள் எம்.பி. ஆவார். காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில், தனது தந்தையின் நற்பெயரை கெடுத்ததாக தனது உறவினர்கள் ஹரிஷ் ராவ், சந்தோஷ் குமார் ஆகியோர் மீது கவிதா குற்றம் சாட்டினார். அதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அவர் பாரத ராஷ்டிர சமிதியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர், தனது எம்.எல்.சி. பதவியை கவிதா ராஜினாமா செய்தார். தெலுங்கானா ஜக்ருதி என்ற கலாசார அமைப்பை தொடங்கி, பொதுப்பிரச்சினைகளில் கவிதா கவனம் செலுத்தி வருகிறார்.இந்நிலையில், தெலுங்கானா ஜக்ருதியை அரசியல் கட்சியாக தொடங்குவது குறித்து முன்னாள் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் கவிதா ஆலோசனை நடத்தினார்.சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் ஐதராபாத்தில் 5 நாட்கள் தங்கி இருந்தார். அப்போது அவருடன் கவிதா ஆலோசனை நடத்தியதாக தெலுங்கானா ஜக்ருதி வட்டாரங்கள் தெரிவித்தன.