இந்திய டி20 அணியின் முக்கிய வீரரான திலக் வர்மாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் அவரின் உடல்நலம் பற்றிய முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தது. விஜய் ஹசாரே டிராபியில் ஹைதராபாத் அணிக்காக திலக் வர்மா விளையாடி வந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக போட்டியிலிருந்து விலகினார். உடனடியாக அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டது.
Add Zee News as a Preferred Source

அறுவை சிகிச்சை
அதன் பின்னர் ராஜ்கோடில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இருந்து அவர் விலகியுள்ளார். அடுத்த மாதம் டி20 உலக கோப்பை தொடங்கியுள்ள நிலையில், திலக் வர்மாவின் காயம் இந்திய ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. விரைவில் காயம் குணமாகுமா அல்லது டி20 உலக கோப்பையில் அவர் விலக நேரிடுமா என்ற அச்சம் இருந்து வந்தது. ஆசிய கோப்பை இறுதி போட்டியில் திலக வர்மா தனி ஒருவராக இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
பிசிசிஐ அப்டேட்
தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி, திலக் வர்மா இன்று பெங்களூரில் உள்ள பிசிசிஐயின் உயர்திறன் மையத்திற்கு செல்கிறார் என்றும், அவருக்கு அங்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், அதில் அவர் தேர்ச்சி பெற்றால் நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் விளையாடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. நாளை முதல் டி20 போட்டி தொடங்கியுள்ள நிலையில், இந்த மாத இறுதியில் நான்காவது டி20 போட்டி நடைபெற உள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயர் சேர்ப்பு
முதல் மூன்று டி20 போட்டியில் திலக் வர்மா விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக செயல்பட்டிருந்தார். பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்து, தனது அணியை இறுதி போட்டி வரை அழைத்துச் சென்றார். முதல் மூன்று போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் நிச்சயம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் திலக் வர்மா விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். கடந்த 2025ம் ஆண்டு திலக் வர்மாவுக்கு மிக சிறப்பாக அமைந்தது. 18 போட்டிகளில் 129.15 ஸ்ட்ரைக் ரேட்டில் 47.25 என்ற சராசரியுடன் 567 ரன்களைக் குவித்துள்ளார்.
இந்திய டி20 அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ரின்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சகரவர்த்தி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவி பிஷ்னோய்.
About the Author
RK Spark