தேனி மாவட்டம் போடி மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் ஐந்தாவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ராஜேந்திரன். இவர் தனது வார்டில் உள்ள வினோபாஜி காலனியில் சாலை அமைப்பதற்காக பேரூராட்சியிலிருந்து நிதி பெற்று சாலை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளார்.
‘சாலையின் ஓரத்தில் உள்ள கழிவுநீர்க் கல்வாய்களைச் சரி செய்து உயர்த்திக் கட்டி விட்டு அதன் பிறகு சாலை போடுங்கள்’ எனத் தவெக கட்சியினர் கவுன்சிலரிடம் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு திமுக கவுன்சிலர் ராஜேந்திரன் சார்பில் அந்தப் பகுதியில் பேனர் ஒன்று வைக்கப்பட்டது. அதில், “கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலைகள் தரமாக அமைக்கப்படும். இதில் சில தற்குறிகள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள், குறைகள் இருந்தால் கவுன்சிலர் ஆகிய என்னிடம் கூற வேண்டும்” எனத் தன்னுடைய தொலைபேசி எண்ணுடன் வினோபாஜி காலனி பகுதியில் பேனர் வைத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த தமிழக வெற்றிக் கழகத்தினர் அந்தப் பேனருக்கு அருகாமையில், “கேள்வி கேட்டால் ஓட்டு போட்ட மக்களை தற்குறி எனக் கூறுவதா?” எனக் குறிப்பிட்டு திமுக கவுன்சிலர் வெளியிட்ட புகைப்படத்திற்கு உண்மை புகைப்படமாகச் சில புகைப்படங்களை வைத்து, “மக்களை முடிவு செய்வீர். யார் தற்குறி தவெகவா? தீய எண்ணம் கொண்ட?” குறிப்பிட்டு பேனர் வைத்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போடி தாலுகா காவல்துறையினர் இரவோடு இரவாக இரு பேனர்களையும் அகற்றினர்.
மேலும் அப்பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படாத வகையில் இரவு ரோந்து பணியிலும் பாதுகாப்புப் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.