விபத்தில் உயிரிழந்த SSI-யின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தாதது ஏன்?- முதல்வருக்கு பறந்த புகார்!

தூத்துக்குடி, தெர்மல்நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சுப்பையா. கடந்த 17.01.1986-ம் நாள், அப்போதைய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். பின்னர், நெல்லை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி தனி மாவட்டமாக பிரிந்த போது தூத்துக்குடியில் தனது பணியை தொடர்ந்தார்.

முதல் நிலை காவலர், தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர், பதவி உயர்வில் தற்போது 40 ஆண்டு கால அனுபவத்துடன் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியில் இருந்து வந்தார்.

உயிரிழந்த எஸ்.எஸ்.ஐ சுப்பையா- ராஜூ

வரும் 30.06.2026 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில்  தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று (19.01.2026) உயிரிழந்தார்.

பின்னர், அவரின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு சிதம்பரநகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரின் உடலுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் அரசு மரியாதை செய்யப்படவில்லை. இதற்கு வருத்தமும், கண்டனமும் தெரிவித்து  தமிழக முதல்வருக்கு தமிழக ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச் சங்கம் சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச் சங்கத்தின் தூத்துக்குடி  மாவட்ட செயல் தலைவர் த.ராஜூவிடம் பேசினோம், “பணியில் இருந்தபோது உயிரிழக்கும் கீழ் நிலை முதல் உயர்நிலை வரையிலான அனைத்து காவல்துறையினரின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட வேண்டும் என்ற வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

உயிரிழந்த நண்பர் சுப்பையா 40 ஆண்டு காலம் பணி அனுபவம் உடையவர். சிறப்பு உதவி ஆய்வாளர் ரேங்கில் பணி செய்தவர். துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தியிருக்க வேண்டும்.

சிலம்பரசன் – தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி

ஆனால், மாவட்ட காவல்துறை நிர்வாகம் மரியாதை செலுத்த தவறியது வருத்தமளிக்கிறது. அவருடன் பணியாற்றிய சக காவலர்கள், நண்பர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து சென்றது சற்று ஆறுதல் அளிக்கிறது. அவர் பணிபுரிந்த காவல் நிலையத்தின் உயரதிகாரி மாவட்ட எஸ்.பி., சிலம்பரசனின் கவனத்திற்கு ஏன் கொண்டு செல்லவில்லை என்ற கேள்வியும் எழுகிறது?

 சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறை தண்டனையில் இருந்து உடல்நலக்குறைவால் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரையின் உடலுக்குக்கூட மதுரையில் 21 குண்டு முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்ட பிறகே அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அவரின் மகன் பிரவானுக்கு அப்போதைய மாவட்ட எஸ்.பி., பாலஜி சரவணன் பணியில் இருந்தபோது எஸ்.பி., அலுவலகத்தில் கருணை அடிப்படையில் பணியும் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மில்லர்புரத்தில் இயங்கி வரும் ஆயுதப்படை அலுவலகத்திற்கும் சிதம்பரநகர் மின் மயானத்திற்கும் சுமார் 500 மீட்டர் தூரம்தான் இருக்கும். மாவட்ட எஸ்.பி., அரசு மரியாதை செலுத்தாவிட்டாலும்கூட கீழ் நிலை அதிகாரிகளையாவது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு மரியாதை செய்ய பணித்திருக்கலாம்.

மாவட்ட காவல் அலுவலகம்

முன்னாள் டி.ஜி.பி சைலேந்திரபாபு பணியில் இருந்தபோது காவல்துறையில் பணியில் இருந்தபோது, காவல்துறையில் ஓய்வுபெற்று உயிர்நீத்த காவல்துறையினரின் உடலுக்கு சம்மந்தப்பட்ட காவல்நிலைய எல்கைக்குட்பட்ட காவல் ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர் யாராவது இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

அதை பெரும்பாலான காவல்துறை அதிகாரிகள் கடைபிடிப்பதில்லை. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை நிர்வாகம் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு அரசு மரியாதை பணியை செய்யாமல் இருந்தது, மாவட்டத்தில் அனைத்து பணியில் இருக்கும் மற்றும் காவல்துறையில் ஓய்வு பெற்ற அனைத்து காவல்துறையினர் குடும்பங்கள் மன வேதனைக்கு உள்ளாகி உள்ளது.  

இறந்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு அரசு மரியாதை செலுத்தாத தூத்துக்குடி மாவட்ட காவல்துறை நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த செயலை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் வரும் சட்ட மன்ற தேர்தல் பணிக்கு அழைத்தால் ஓய்வு பெற்ற காவல் துறையினர் யாரும் செல்ல கூடாது என முடிவு எடுத்து எங்களுடைய உணர்வுப்பூர்வமான எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.” என்றார்.  

மாவட்ட எஸ்.பி.,சிலம்பரசனை போனில் தொடர்பு கொண்டோம், “ஐயாவின் கன் மேன் பேசுகிறேன். சார் ஒரு மீட்டிங்கில் இருக்கிறார்” எனச் சொல்லி அழைப்பை துண்டித்தார்.

தூத்துக்குடி எஸ்.பி அலுவலகம்

இன்ஸ்பெக்டர் உமையொருபாகனை தொடர்பு கொண்டோம், “ஆயுதப்படையில் போலீஸார் வேறு பணிகளுக்கு சென்றதால் மரியாதை செலுத்த இயலவில்லை. அதுமட்டுமில்லாமல் அரசு மரியாதைக்கென பயிற்சி தனி டீம் உள்ளது. அவரின் குடும்பத்தினரிடம் பேசியிருக்கிறோம். வரும் 21-ம் தேதி எஸ்.பி சாரின் தலைமையில் சிறப்பு மரியாதை செலுத்த உள்ளோம்.” என்றார்.  

உடலுக்கு அரசு மரியாதை செலுத்துவதற்கும், உருவப்படத்திற்கு அரசு மரியாதை செலுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளதுதானே?   

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.